சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்ய நிலையில், இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) வெளியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதே சமயம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் சென்னை அல்லிகுளம் பகுதியில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ஞானசேகரனுக்கு எதிரான வழக்கில் இன்று (மே 28) சென்னை மகிளா நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதன்படி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும், அவர் மீது இரக்கம் காட்ட கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் முன்வைத்த நிலையில், தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க ஞானசேகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்து, அதற்கான தண்டனை விவரம் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Read More : BREAKING | திமுக சார்பில் மாநிலங்களவைக்கு செல்கிறார் கமல்ஹாசன்..!! வைகோவுக்கு இடமில்லை..!!