தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், பேருந்தில் பயணித்த பயணிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் காமராஜர்புரம் பகுதியில் நடந்துள்ளது. இரண்டு தனியார் பேருந்துகளும் அதிவேகமாக வந்த நிலையில், நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேருந்துகளும் பலத்த சேதம் அடைந்துள்ளன.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் காவல் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். மீட்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேருந்துகளும் மோதி ஏற்பட்ட இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து கடையநல்லூர் பகுதி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே விபத்தில் 8 பேர் உயிரிழந்த இச்சம்பவம், அப்பகுதி மக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



