தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு அமைச்சரின் கைது குறித்த பரபரப்பான யூகங்கள் எழுந்துள்ளன. நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறை தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளது. இதன் விளைவாக, அமைச்சர் நேரு கைது செய்யப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு என்ன..?
அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில், நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் காலியாக இருந்த 2,538 பணியிடங்களுக்கு வேலை வழங்குவதற்காக பெருமளவு பணம் பெறப்பட்டு முறைகேடாக ஆட்களை நியமித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமலாக்கத்துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
இந்த முறைகேடு குறித்த ஆவணங்கள், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது அமலாக்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைப்பற்றப்பட்ட இந்த முக்கிய ஆவணங்களின் அடிப்படையிலேயே, சட்டரீதியான நடவடிக்கையைத் தொடங்குமாறு அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
செந்தில் பாலாஜி பாணியில் நடவடிக்கை..?
ஏற்கனவே, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தற்போது, கிட்டத்தட்ட அதே பாணியில், அதாவது பண மோசடி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைச்சர் நேருவின் மீதும் நடவடிக்கை கோரப்பட்டிருப்பதால், செந்தில் பாலாஜிக்கு நேர்ந்ததை போலவே அமைச்சர் கே.என்.நேருவும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசத் தொடங்கியுள்ளன.



