கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இஸ்லாமாபாத்திற்கும் காபூலுக்கும் இடையில் தற்போது எந்தவிதமான உறவும் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை, இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளை மிகவும் மோசமாக்கியுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள ஆசிஃப், “தற்போதுள்ள நிலைமை ஒரு இறுக்கமான தேக்கநிலை தான். நேரடிப் பகைமை இல்லை. ஆனால், சூழல் மிகவும் விரோதமானது. இன்று வரை, நேரடி அல்லது மறைமுகத் தொடர்புகள் எதுவும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான பகை எந்த நேரத்திலும் மீண்டும் தொடங்கலாம். எனவே, நாங்கள் எங்கள் பாதுகாப்பை குறைத்து மதிப்பிட முடியாது” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு குறித்துக் கேட்கப்பட்டபோது, மிரட்டல்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை அச்சுறுத்திக் கொண்டே பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அவர்கள் முதலில் தங்கள் அச்சுறுத்தலின்படி செயல்படட்டும். அதன் பிறகு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்” என்று ஆசிஃப் கூறினார்.