விஜய்யின் அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தவெக அறிவித்துள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. விஜய்யின் கால தாமதமான வருகையால் இந்த கூட்ட நெரிசல் நடந்ததாகவும், தவெகவினரின் பொறுப்பற்ற தன்மையும் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.. ஆனால், தாங்கள் முதலில் கேட்ட இடத்தை அரசு வழங்கவில்லை, ஆம்புலன்ஸ் ஏன் வந்தது, இரவில் ஏன் உடற்கூறாய்வு செய்யப்பட்டது என பல கேள்விகளை எழுப்பினர்..
ஆனால் இந்த சம்பவத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினரோ இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவில்லை.. இதுகுறித்து பலரும் விஜய்யை விமர்சித்து வந்த நிலையில் கூட்ட நெரிசல் நடந்து 3 நாட்களுக்கு பிறகு விஜய் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார்.. அந்த வீடியோவில் தவறுக்கு பொறுப்பேற்காமல், தமிழக அரசை குற்றம்சாட்டி பேசியிருந்தார்.. மேலும் ‘சி.எம். சார்.. உங்களுக்கு என்னை பழிவாங்கனும்னா என்னை எதுவேண்டுமானாலும் செய்யுங்க.. தொண்டர்கள் மீது கை வைக்காதீங்க..” என்று பேசியிருந்தார்.. அவரின் இந்த வீடியோவுக்கும் பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விஜய்யின் அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தவெக அறிவித்துள்ளது.. மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



