சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்று, அங்குப் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மிரட்டி கொள்ளையடித்த வழக்கில், தமிழ்நாட்டை சேர்ந்த இருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையையும், 12 பிரம்பு அடிகளையும் விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (27) ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி சிங்கப்பூருக்கு சுற்றுலாப் பயணமாக சென்றுள்ளனர். 2 நாட்கள் கழித்து லிட்டில் இந்தியா பகுதியில் நடந்து சென்றபோது, அறிமுகமில்லாத ஒரு நபர் இவர்களை அணுகி, பாலியல் சேவைகளை பெறுவது குறித்து விசாரித்து, சில தொலைபேசி எண்கள் அடங்கிய அட்டையை கொடுத்து சென்றுள்ளார்.
இதைப் பயன்படுத்திப் பாலியல் தொழிலாளர்களை அறைக்கு வரவழைத்து, அவர்களை மிரட்டிப் பணம் பறிக்கலாம் என்று ஆரோக்கியசாமி திட்டமிட, ராஜேந்திரனும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, முதல் பெண்ணை தொடர்புகொண்டு மாலை 6 மணியளவில் தங்கள் ஹோட்டல் அறைக்கு வரவழைத்துள்ளனர். அந்த பெண் வந்ததும், அவரைத் தாக்கி, கை மற்றும் கால்களை கட்டிப் போட்டுள்ளனர். பின்னர், அவரிடமிருந்து நகைகள் மற்றும் இந்திய மதிப்பில் ரூ. 1.37 லட்சம் ரொக்கம், பாஸ்போர்ட் மற்றும் ஏடிஎம் கார்டுகளையும் பறித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, 2-வது பெண்ணை மற்றொரு ஹோட்டல் அறைக்கு இரவு 11 மணிக்கு வரவழைத்துள்ளனர். அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக அறைக்குள் இழுத்துச் சென்ற ராஜேந்திரன், அவர் சத்தம் போடாதிருக்க வாயை பொத்தியுள்ளார். பின்னர், அந்தப் பெண்ணிடமிருந்து இந்திய மதிப்பில் ரூ.55 ஆயிரம் ரொக்கம், இரண்டு செல்போன்கள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு, மீண்டும் வரும் வரை அறையை விட்டு வெளியே வரக் கூடாது என மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இரண்டாவதாகப் பாதிக்கப்பட்ட பெண், மறுநாள் இதுகுறித்து மற்றொரு நபரிடம் தெரிவித்ததன் மூலமாக இவர்களின் செயல் காவல்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து, ஆரோக்கியசாமி மற்றும் ராஜேந்திரன் இருவரையும் கைது செய்தனர். வழக்கு விசாரணையின் முடிவில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானது. தங்கள் சார்பில் வாதிட வழக்கறிஞர் இல்லாததால், இருவருமே நீதிபதியிடம் கருணையுடன் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு மன்றாடினர்.
ஆரோக்கியசாமி டைசன் நீதிமன்றத்தில் பேசுகையில், “என் தந்தை இறந்துவிட்டார். 3 சகோதரிகளில் ஒருவருக்கு மட்டுமே திருமணம் முடிந்துள்ளது. எங்களிடம் பணம் இல்லாத காரணத்தினால் தான் இந்த குற்றத்தை செய்தோம்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார். அதேபோல் ராஜேந்திரன் மயிலரசன் பேசுகையில், “என் மனைவியும் குழந்தையும் இந்தியாவில் தனியாக உள்ளனர். அவர்கள் நிதி நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று விளக்கி மன்னிப்பு கோரினார். இருப்பினும், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, நீதிபதி இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும், கூடுதலாக 12 பிரம்பு அடிகளையும் விதித்து தீர்ப்பளித்தார்.
Read More : பெரும் சோகம்..!! தூக்கி வீசிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்..!! துடிதுடித்து பலியான 4 சிறுவர்கள்..!!