கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லால்புரம் மணலூர் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 22). இவரும், காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 25 வயது பட்டதாரிப் பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
மகேஷ் அப்பெண்ணிடம் உன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அந்தப் பட்டதாரிப் பெண்ணை அவர் தனது வீட்டிற்கு வரவழைத்து அவருடன் தொடர்ந்து நெருக்கமாகப் பழகி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
நாட்கள் செல்ல செல்ல, பாதிக்கப்பட்ட அப்பெண் மகேஷிடம் தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். அப்போது, மகேஷ் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து, அவரை தவிர்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காதலன் மகேஷை உடனடியாக கைது செய்தனர். மேலும், மகேஷின் இந்தக் குற்ற செயலுக்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் அவரது தாய் சங்கீதா, தந்தை ரமேஷ், அக்காள் சுஜிதா, மற்றும் மாமா வாசு ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காதலன் மற்றும் அவனது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



