சிவகார்த்திக்கேயன் சூரியின் நட்பு அனைவரும் அறிந்ததே. சூரி, சிவகார்த்திகேயனை “தம்பி” என அன்புடன் அழைப்பார். அவர்கள் இணைந்து நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ போன்ற படங்கள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன. மேலும், சூரி ஹீரோவாக நடித்த ‘கொட்டுக்காளி’ படத்தை சிவகார்த்திகேயனே தயாரித்திருந்தார்.
சூரி இன்று ஹீரோவாக உயர்ந்தாலும், அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது இல்லை. ‘வெண்ணிலா கபடி குழு’ படம் தான் அவருக்கு திரையுலகில் பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதன்பிறகு காமெடி நட்சத்திரமாக மாறிய அவர், இப்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளார். அதேபோல், சின்னத்திரையில் தொடங்கிய சிவகார்த்திகேயன், கிண்டல்களையும் விமர்சனங்களையும் கடந்து இன்று டாப் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்துள்ளார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் மதராஸி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இருவரின் நட்பை வெளிப்படுத்தும் ஒரு பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம் சூரி ஃபோனில் “நான் டான்ஸ் மாஸ்டர் பேசுறேன்” என்று குரலை மாற்றி பேசுகிறார்.
ஆனால் சிவா உடனே சூரியின் குரலை அறிந்து “நீங்க ஹலோனு சொன்னவுடனே தெரிஞ்சிடுச்சு அண்ணா!” என்று சிரித்தபடி கூறுகிறார். அதற்கு சூரி, “தம்பி, இவ்வளவு கஷ்டப்பட்டு மிமிக்ரி செய்றேன். கொஞ்சம் மரியாதை கொடுங்க ப்பா!” என சிரிப்பை கிளப்புகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “இருவரும் எவ்வளவு உண்மையான நண்பர்கள்!, திரைக்கு பின்னாடியும் ஜாலியாக பேசுகிறார்கள்” என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
Read more: உலகம் முழுவதும் திடீரென முடங்கிய YouTube.. வீடியோ லோட் ஆகாததால் பல பயனர்கள் அவதி..



