மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படித்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த 23 வயது மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, அந்த மாணவி தனது ஆண் நண்பருடன் உணவு அருந்துவதற்காக மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே செல்ல முயன்றபோது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அப்போது, திடீரென வழிமறித்த ஒரு கும்பல், மாணவியை மருத்துவமனை வளாகத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த மாணவி, அன்றிரவு நடந்த சம்பவம் குறித்துக் காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலம் மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது.
மாணவியின் வாக்குமூலம் :
மாணவி அளித்த வாக்குமூலத்தில், “அவர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு எங்களை நோக்கி வருவதை கவனித்தோம். உடனே நாங்கள் காட்டுப் பகுதியை நோக்கி ஓட ஆரம்பித்தோம். அந்தக் கும்பலில் இருந்த 3 பேர் எங்களைத் துரத்தி வந்து என்னைப் பிடித்துக் காட்டுக்குள் இழுத்துச் சென்றனர். அவர்கள் என்னுடைய தொலைபேசியைப் பறித்துக் கொண்டு, என்னுடைய நண்பரை மீண்டும் அங்கு வருமாறு அழைக்கச் சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர் வராததால், என்னைத் தரையில் படுக்கச் சொல்லி வற்புறுத்தினர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தான் வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டபோது, “சத்தம் போட்டால் மேலும் பலரை அழைத்து வந்து இதையே செய்ய வைப்போம்” என்று அந்தக் கும்பல் மிரட்டியதாக அந்த மாணவி நெஞ்சை உலுக்கும் தகவலைப் பகிர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் இதுவரை 5 பேரை கைது செய்துள்ளனர். மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகப்படும் குற்றவாளிகள் அனைவரையும் கல்லூரிக்கு அருகில் உள்ள சம்பவ இடத்திற்குக் காவல்துறையினர் அழைத்துச் சென்று, குற்றச் சம்பவத்தை மீண்டும் உருவாக்கிப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர்.