2026 புத்தாண்டை முன்னிட்டு, அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது வாடிக்கையாளர்களுக்கு பம்பர் சலுகையை அறிவித்துள்ளது. குறைந்த விலையில் அதிக டேட்டா வழங்கும் புதிய வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா (Vi) போன்ற தனியார் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக அமைந்துள்ளது.
BSNL அறிவித்துள்ள இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.2,799. டிசம்பர் 26 முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பு 365 நாட்கள் செல்லுபடியாகும் தன்மையும், அதிக அளவு டேட்டா நன்மைகளும் ஆகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்பவர்கள் ஒரு வருடம் முழுவதும் மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் தொந்தரவின்றி சேவைகளைப் பெறலாம். தினமும் 3GB அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு ஆண்டில் மொத்தமாக 1,095GB டேட்டா கிடைக்கும். தினசரி செலவாகக் கணக்கிட்டால், பயனருக்கு ரூ.8 மட்டுமே ஆகும்.
அழைப்புச் சேவையில், நாடு முழுவதும் எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. தேசிய ரோமிங்கும் இலவசம். மேலும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், அதிகமாக வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யும் பயனர்களுக்கு இந்த திட்டம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
ரூ.2,399 மற்றும் ரூ.2,799 – எது சிறந்தது? BSNL ஏற்கனவே ரூ.2,399 மதிப்பிலான வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்கி வருகிறது. அந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா மற்றும் 365 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் வழங்கப்படுகின்றன. புதிய ரூ.2,799 திட்டத்தில் தினமும் 3GB டேட்டா கிடைக்கிறது. அதாவது கூடுதலாக ரூ.400 செலுத்துவதன் மூலம், ஒரு ஆண்டில் 365GB கூடுதல் டேட்டாவைப் பெறலாம். இதைக் கணக்கிட்டால், கூடுதல் 1GB டேட்டாவிற்கு ரூ.1.10 மட்டுமே செலவாகும். அதிக டேட்டா தேவைப்படுபவர்களுக்கு புதிய திட்டம் மிகவும் லாபகரமானதாக உள்ளது.
புத்தாண்டு – கிறிஸ்துமஸ் சிறப்பு சலுகைகள்:
புதிய திட்டம் மட்டுமல்லாமல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு BSNL தனது பழைய திட்டங்களிலும் கூடுதல் டேட்டா சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.2,399 திட்டத்தை டிசம்பர் 15, 2025 முதல் ஜனவரி 31, 2026 வரை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு, வழக்கமான 2GBக்கு பதிலாக ஒரு நாளைக்கு 2.5GB டேட்டா வழங்கப்படும்.
மேலும், ரூ.225, ரூ.347 மற்றும் ரூ.485 போன்ற குறுகிய கால திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால், தினமும் கூடுதலாக 0.5GB டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க BSNL ‘கிறிஸ்துமஸ் போனான்ஸா’ என்ற சிறப்பு சலுகையையும் அறிவித்துள்ளது. இதன் கீழ், புதிய BSNL சந்தாதாரர்கள் ரூ.1 மட்டும் செலுத்தி 30 நாட்களுக்கு சேவைகளைப் பெறலாம்.
இந்த சலுகையில் இலவச சிம் கார்டு, வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகை டிசம்பர் 31 வரை மட்டுமே கிடைக்கும். குறிப்பாக கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற பயனர்களுக்கு இது பெரும் பயனளிக்கும் என BSNL தெரிவித்துள்ளது.
ரீசார்ஜ் செய்வது எப்படி? BSNL-ன் புதிய ரூ.2,799 திட்டம் மற்றும் பிற சலுகைகள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ‘BSNL Self Care’ செயலி மூலம் பெறலாம். விரைவில் Paytm, Google Pay, PhonePe உள்ளிட்ட பிற டிஜிட்டல் ரீசார்ஜ் தளங்களிலும் இந்த திட்டங்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 4G சேவைகளை விரிவுபடுத்தி வரும் BSNL, 2026 ஆம் ஆண்டில் மேலும் மேம்பட்ட சேவைகளை வழங்கத் தயாராகி வருவதை இந்த சலுகைகள் உணர்த்துகின்றன. குறைந்த விலையில் அதிக டேட்டா தேடும் பயனர்களுக்கு BSNL-ன் இந்த புதிய திட்டங்கள் நிச்சயம் கவனிக்கத்தக்கவையாக உள்ளன.
Read more: மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு..! என்ன தெரியுமா..?



