புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி என்ற இடத்தில் புதிதாக பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவை ஒட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால் 2 லிட்டர் இலவசம் என்றும், 5 லிட்டர் வாங்கினால் 2.5 லிட்டர் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால், இலவசமாக பெட்ரோல் மற்றும் டீசல் பெறுவதற்காக ஏராளமான வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையத்திற்கு விரைந்தனர். இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் என அனைத்து விதமான வாகனங்களும் பெட்ரோல் நிலையம் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றதால், அவ்வழியாக சென்ற மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இது போன்ற இலவசங்களை அறிவிக்கும் முன்னர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என வாகன ஓட்டுகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.