தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் பொருட்களை வாங்குவதற்கு மொத்தப் பணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்ற நிலையை மாற்றி, மாத தவணை முறை (EMI) இன்று பலருக்கும் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. இந்த முறையே தற்போது புதிய வடிவத்தில், ‘இப்போது வாங்குங்கள், பிறகு பணம் செலுத்துங்கள்’ (Buy Now Pay Later – BNPL) என்ற அம்சமாகப் பல ஆன்லைன் செயலிகள் மற்றும் தளங்களில் பிரபலமடைந்து வருகிறது. இந்த BNPL வசதி கவர்ச்சிகரமாகத் தோன்றினாலும், இதில் பல நிதிச் சிக்கல்கள் மறைந்திருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, BNPL அம்சத்தை பயன்படுத்திப் பொருட்களை வாங்கும் நேரத்தில் அது இனிமையாக இருக்கலாம். ஆனால், அதற்கான பில் கைக்கு வந்ததும் தான் அதில் உள்ள சிக்கல் என்னவென்று புரியும். ஒரு பொருளாதார நிபுணர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் (LinkedIn) பகிர்ந்த ஒரு சம்பவம் இதை விளக்கியுள்ளது.
ஒரு நபர் தீபாவளி பண்டிகையின் போது, 5 வெவ்வேறு BNPL செயலிகளைப் பயன்படுத்தி ரூ. 85,000 மதிப்பிலான பொருட்களை வாங்கியுள்ளார். குறைவான மாத தவணை மற்றும் ‘வட்டி இல்லை’ என்ற சலுகையால் அவர் இதை சமாளித்து விடலாம் என்று நம்பினார். ஆனால், அவர் ஒரு மாத தவணையை தாமதமாக செலுத்தியதால், அவருக்கு ரூ. 2,300 அபராதக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சிறிய தாமதம் அவரது கிரெடிட் ஸ்கோரில் (Credit Score) கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி, அவர் தற்போது அதற்காக போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான BNPL செயலிகளும் இணையதளங்களும், 0% வட்டி என்ற அம்சத்தை முன்னிறுத்தினாலும், அது நீங்கள் பணத்தை உரிய நேரத்திற்குள் திருப்பிச் செலுத்தும்போது மட்டுமே உண்மையாக இருக்கும்.
ஒருவேளை நீங்கள் பணம் செலுத்த வேண்டிய தேதியை தாண்டிவிட்டால், தாமத கட்டணம் அல்லது பல மடங்கு வட்டி விதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இது நிதி சுமையை அதிகரிப்பதுடன், முக்கிய ஆவணமாக கருதப்படும் கிரெடிட் ஸ்கோரைப் பாதித்து, எதிர்காலத்தில் பெரிய கடன்கள் பெறுவதற்கான வாய்ப்பையும் குறைக்கும். எனவே, BNPL போன்ற உடனடி தவணை முறைகளை பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read More : தினமும் காலையில் துளசி நீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்..!! இத்தனை பிரச்சனைகளுக்கு அருமருந்து..!!



