புற்றுநோய் என்பது முதுமையில் மட்டுமே வரக்கூடிய நோய் என்ற பிம்பம் தற்போதைய சூழலில் முற்றிலும் உடைந்துவிட்டது. சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் இந்த பாதிப்புக்கு உள்ளாவது மருத்துவ உலகையே கவலை கொள்ள செய்துள்ளது. “வருமுன் காப்பதே சிறந்தது” என்ற பழமொழிக்கேற்ப, இளம் வயதிலேயே தகுந்த பரிசோதனைகளைச் செய்துகொள்வது கட்டாயமாகியுள்ளது. இருப்பினும், நமது அன்றாட வாழ்வியலில் சில ஆரோக்கியமான மாற்றங்களை செய்துகொள்வதன் மூலம், சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை புற்றுநோய் அபாயத்தை தவிர்க்க முடியும் என அறிவியல் ஆய்வுகள் உறுதிபட தெரிவிக்கின்றன. பிரபல புற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் அபினவ், புற்றுநோய் அபாயத்தை குறைப்பதற்கான 5 முக்கிய வாழ்வியல் முறை குறித்து பகிர்ந்துள்ளார்.
சரிவிகித உணவு மற்றும் ஊட்டச்சத்து :
நமது தட்டில் இருக்கும் உணவே நமது ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் புற்றுநோய்க்கு எதிரான அரணாகச் செயல்படுகின்றன. அதேசமயம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதீத சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த தின்பண்டங்களைத் தவிர்ப்பது ரத்தத்தின் தூய்மையைப் பேண உதவும்.
உடல் எடை நிர்வாகம் மற்றும் உடற்பயிற்சி :
உடல் பருமன் என்பது பல நோய்களுக்கு நுழைவுவாயிலாக அமைகிறது. 20 வயதிலிருந்தே உடல் எடையில் கவனம் செலுத்துவது 60 வயது வரை நமக்கு நன்மைகளைத் தரும். நடைப்பயிற்சி, யோகா, மிதிவண்டி ஓட்டுதல் என ஏதோ ஒரு உடல் உழைப்பில் வாரத்திற்கு சுமார் 150 நிமிடங்களாவது செலவிட வேண்டும். இது நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதுடன், தேவையற்ற கொழுப்பு உடலில் சேர்வதைத் தடுக்கும்.
போதைப் பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி :
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகிய இரண்டும் நேரடியாகப் பல்வேறு புற்றுநோய்களுடன் தொடர்புடையவை. “சமூக ரீதியான மது அருந்துதல்” (Social Drinking) என்பது கூட மெல்ல மெல்ல ஆரோக்கியத்தைச் சிதைக்கும் என்பதை உணர வேண்டும். இந்தப் பழக்கங்களை எந்த வயதில் கைவிட்டாலும், அது உங்கள் உடலின் மீட்புப் பணிக்கு (Recovery) உதவும்.
மனநலம் மற்றும் ஆழ்ந்த உறக்கம் :
தொடர்ச்சியான மன அழுத்தமும், போதிய உறக்கமின்மையும் ஹார்மோன் சமநிலையைப் பாதித்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் செயலிழக்கச் செய்கின்றன. தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் கொள்வதும், தியானம் அல்லது பொழுதுபோக்குகள் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிப்பதும் புற்றுநோய் தடுப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
முன்னெச்சரிக்கை பரிசோதனைகள் :
புற்றுநோயை பொறுத்தவரை, அதனை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் நூறு சதவீதம் குணப்படுத்திவிட முடியும். எனவே, ஆண்டுக்கொருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதும், மருத்துவர்களின் அறிவுரைப்படி தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்வதும் அவசியம். உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது உயிரைக் காக்கும்.
Read More : தமிழக பத்திரப் பதிவுத்துறையில் அதிரடி மாற்றம்..!! நடைமுறைக்கு வந்த கடுமையான விதிமுறைகள்..!! என்ன தெரியுமா..?



