துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.. அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது.. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது..
இந்த நிலையில், பிரதமர் மோடியை என்.டி.ஏ வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.. குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று பிரதமரை சந்தித்தார்.. அவர் மரியாதை நிமித்தமாக பிரதமரை சந்தித்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
பிரதமர் மோடி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ திரு. சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன். அவரது நீண்ட ஆண்டு பொது சேவை மற்றும் பல்வேறு துறைகளில் அவர் ஆற்றிய அனுபவம் நமது நாட்டை பெரிதும் வளப்படுத்தும். அவர் எப்போதும் காட்டிய அதே அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் தொடர்ந்து தேசத்திற்கு சேவை செய்யட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தற்போது 781 எம்.பிக்கள் உள்ளனர்.. துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற 391 வாக்குகள் தேவை.. தேசிய் ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்பிக்கள் பலம் உள்ளதால் சிபி ராதாகிருஷ்ணனின் வெற்றி வாய்ப்பு அதிகமாகவே உள்ளது..
இதனிடையே தொடர்ந்து இந்தியா கூட்டணி சார்பில், துணை குடியரசு தலைவர் வேட்பாளராக வைகோ நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியானது.. ஆனால் திடீர் திருப்பமாக திருச்சி சிவா அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது… எனினும் சிபி ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் என்று பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..



