உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு நிகர் ஏதுமில்லை. அந்த வகையில், குறைந்த கலோரிகளையும் அதிக சத்துக்களையும் கொண்ட முட்டைக்கோஸ், உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. இருப்பினும், நன்மைகள் பல இருந்தாலும், சில குறிப்பிட்ட உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் முட்டைக்கோஸை உட்கொள்ளும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
செரிமானம் மற்றும் சிறுநீரக பாதிப்பு :
முட்டைக்கோஸில் உள்ள ‘ராஃபினோஸ்’ (Raffinose) எனும் சிக்கலான கார்போஹைட்ரேட், சிலருக்கு எளிதில் ஜீரணமாவது இல்லை. இது வயிறு வீக்கம், வாயுத் தொல்லை மற்றும் வயிற்றுப் பிடிப்பை உண்டாக்கும். குறிப்பாக, உணர்திறன் கொண்ட வயிறு உடையவர்களுக்கு இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும். அதேபோல், இதில் உள்ள ஆக்ஸாலிக் அமிலம், கால்சியம் போன்ற தாதுக்களுடன் சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளதால், சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது.
தைராய்டு மற்றும் இதய நோயாளிகள் :
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் முட்டைக்கோஸில் உள்ள ‘கோயிட்ரோஜன்கள்’ (Goitrogens) எனும் வேதிப்பொருள் குறுக்கிட வாய்ப்புள்ளது. இது உடல் அயோடின் கிரகிக்கப்படுவதைத் தடுத்து, ஹார்மோன் உற்பத்தியைப் பாதிக்கலாம். அதேபோல், முட்டைக்கோஸில் வைட்டமின்-கே நிறைந்துள்ளதால், இரத்தம் மெலிவதற்கான மருந்து (Blood Thinners) உட்கொள்ளும் இதய நோயாளிகள் இதனைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், வைட்டமின்-கே அந்த மருந்துகளின் வீரியத்தைக் குறைத்து, இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
ஒவ்வாமை மற்றும் தாய்மார்களுக்கான எச்சரிக்கை :
சிலருக்கு முட்டைக்கோஸில் உள்ள ‘ஹிஸ்டமைன்’ காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டு தோல் அரிப்பு, தும்மல் அல்லது கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது சுவாசச் சிரமத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இறுதியாக, கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இதனை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது அவசியம். இதில் உள்ள வாயுவை உண்டாக்கும் தன்மை, தாய்க்கும் குழந்தைக்கும் தேவையற்ற வயிற்று உபாதைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கவனமுடன் இருப்பது சிறந்தது.
Read More : Dream | உங்கள் கனவில் சடலம், சுடுகாடு வருகிறதா..? இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?



