சென்னையில் காகங்கள் இறந்த நிலையில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது.. இது தொடர்பாக உடனடியாகத் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.. மேலும் பறவை காய்ச்சல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.. இந்தப் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவுகிறதா? அப்படியானால், அதற்கான காரணம் என்ன? இதைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்..
பறவை காய்ச்சல் என்றால் என்ன? இது மனிதர்களுக்குப் பரவுமா?
இது இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸால் ஏற்படும் ஒரு தொற்றும் நோயாகும். H5N1 போன்ற வகைகள் மிகவும் பொதுவானவை. இந்தப் பறவை காய்ச்சல் முதன்மையாகக் காட்டுப் பறவைகளைப் பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட காட்டுப் பறவைகள் இதை கோழிகளுக்கும், சில சமயங்களில் மனிதர்களுக்கும் மற்ற பாலூட்டிகளுக்கும் பரப்பக்கூடும். இந்த வைரஸ் பறவைகளின் உமிழ்நீர், மலம் மற்றும் சுரப்புகளின் மூலம் பரவுகிறது.
இது மனிதர்களுக்கு அரிதாகவே பரவினாலும், பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. கோழிப் பண்ணைகளில் கோழிகளைப் பராமரிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை மிகவும் பொதுவானது. இந்தக் காரணங்களுக்காக, வெளியாட்கள் கோழிப் பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்படக் கூடாது. கோழிப் பண்ணையில் பணிபுரியும் ஒருவர் பல பண்ணைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
கோழிப் பண்ணைகள் மற்றும் ஆட்டுப் பண்ணைகளில் ஏதேனும் கோழி/ஆடு நோய்வாய்ப்பட்டாலோ அல்லது இறந்தாலோ, அந்த நோய் மற்றவற்றுக்குப் பரவ வாய்ப்புள்ளது. எனவே, இந்த நோயால் இறக்கும் பறவைகளையும் கால்நடைகளையும் எரியூட்ட வேண்டும்.
பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகள் மற்றும் விலங்குகளை விட, வீடுகளில் வளர்க்கப்படும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு. அதிக எண்ணிக்கையில் பறவைகள் அல்லது விலங்குகள் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பறவை காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவினால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசப் பிரச்சனைகள் மற்றும் கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். தேவைப்பட்டால், அவர்களுக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கும். இதுவரை, பறவைக் காய்ச்சலுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், இன்ஃப்ளூயன்ஸா வைரஸுக்கான தடுப்பூசி உள்ளது. இது முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு நோய் பரவுவதைத் தடுக்க முடியும்.
வழக்கமாக, சுகாதார நிபுணர்கள் ஆண்டு முழுவதும் பறவைக் காய்ச்சலைக் கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக, நாட்டின் எந்தப் பகுதியிலாவது பறவைகள் பெருமளவில் இறந்தால், மருத்துவர்கள் உடனடியாகப் பறவைக் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். இதன் அடிப்படையில், சென்னையிலும் பறவைக் காய்ச்சல் பரிசோதனைகள் விரைவுபடுத்தப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல இடங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிற மாநிலங்களில் இருந்து கோழிகளையும் கோழி இறைச்சியையும் இறக்குமதி செய்ய வேண்டாம் என்றும், தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறும் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.



