இயற்கையாகவே குளிர்ச்சி தரும் ஒரு பானம் தான் இளநீர். இது தாகத்தைத் தணிப்பதுடன், உடலுக்கும் பல நன்மைகளை அளிக்கிறது. எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம், சோடியம், மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளதால், இது ‘இயற்கையான ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்’ என்று அழைக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்கள், ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் அதிகமாக வியர்க்கும் நபர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமாக உள்ளது. அதுவும் கோடை காலங்களில் இளநீருக்கு மவுசு அதிகம்.
இளநீரின் முக்கிய நன்மைகள் :
* இளநீர், உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது, மேலும் கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.
* சில ஆய்வுகளின்படி, இளநீர் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், நீரிழிவு தொடர்பான பாதிப்புகளைக் குறைக்கவும் உதவும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்டுகள், உடலின் செல்களைப் பாதுகாக்கும்.
* இளநீரில் சிறிதளவு செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள் உள்ளன. மேலும், வைட்டமின் சி மற்றும் லாரிக் ஆசிட் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அளவுக்கு மீறினால் ஆபத்து :
* இளநீர் பல நன்மைகளைத் தந்தாலும், அதை அதிகமாகக் குடிப்பது சில உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
* இளநீரில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அதிகப்படியாகக் குடிப்பது ஹைபர்காலேமியாவை ஏற்படுத்தும். இது சீரற்ற இதய துடிப்புக்கு வழிவகுத்து, தீவிரமான நிலையில் மாரடைப்பு கூட ஏற்படலாம்.
* இளநீர் சிலருக்கு மலமிளக்கியாகச் செயல்படும். எனவே, அதிகமாக குடித்தால் வயிற்றுப்போக்கு அல்லது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படலாம். மேலும், சிலருக்கு தேங்காயால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.
* இளநீர் இயற்கையானது என்றாலும், ஒரு கோப்பையில் சுமார் 6 முதல் 8 கிராம் சர்க்கரை உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த குளுக்கோஸ் அளவைப் பாதிக்கலாம்.
யார் தவிர்க்க வேண்டும்..?
குடிக்க வேண்டியவர்கள் : புத்துணர்ச்சி, நீரேற்றம், குறைந்த கலோரி பானத்தைத் தேடுவோர், விளையாட்டு வீரர்கள், மற்றும் பொட்டாசியம் தேவைப்படுபவர்கள் இளநீரைக் குடிக்கலாம்.
தவிர்க்க வேண்டியவர்கள் : சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள், பொட்டாசியம் அளவை பாதிக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் இளநீரைக் குடிப்பதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.