புற்றுநோய் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஒரு மிக முக்கியமான முன்னேற்றத்தை கண்டறிந்துள்ளனர். இது வருங்காலங்களில் மருத்துவ உலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படுகிறது.
ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தவளைகள் மற்றும் பல்லிகளின் குடலில் வாழும் ஒரு சிறப்பு வகை பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இந்த பாக்டீரியா, மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோயை, குறிப்பாக பெருங்குடல் புற்றுநோயை எதிர்க்கும் அபார திறன் கொண்டதாக இருக்கிறது.
அறிவியல் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் பல வேகமான வளர்ச்சிகளை கண்டிருந்தாலும், புற்றுநோய்க்கு முழுமையான, நிரந்தரமான மருந்து இன்னும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், இந்த புதிய கண்டுபிடிப்பு மிகவும் ஆச்சரியமூட்டும் ஒன்றாக இருப்பதோடு, எதிர்காலத்தில் கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றும் வாய்ப்பும் உள்ளது.
ஜப்பானிய விஞ்ஞானிகள் இதுகுறித்து பேசிய போது “ தவளைகள், தவளையினங்கள் (toads) மற்றும் பல்லிகளின் ஜீரண அமைப்பில் உள்ள சில பாக்டீரியாக்கள், மனித உடலில் ஏற்படும் கடுமையான பெருங்குடல் புற்றுநோயை அதன் மூலத்திலேயே அழிக்கும் திறன் கொண்டவை.” என்று தெரிவித்துள்ளனர்..
இந்த பாக்டீரியா அடிப்படையிலான சிகிச்சை முறைகள், தற்போது பயன்படுத்தப்படும் கீமோதெரபி (Chemotherapy), இம்யூனோதெரபி (Immunotherapy) போன்ற சிகிச்சைகளுக்கு மாற்றாக, அதிக பாதுகாப்பானதும், குறைவான பக்கவிளைவுகள் கொண்டதும், நோயாளிகளுக்கு எளிதானதுமான சிகிச்சை வழிகளை உருவாக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
குறிப்பாக, இந்த பாக்டீரியா குடல் மற்றும் மலக்குடலை பாதிக்கும் பெருங்குடல் புற்றுநோயை எதிர்க்கும் திறன் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், எதிர்காலத்தில் புற்றுநோய் சிகிச்சைகள், அறுவை சிகிச்சை குறைவாக, உடலுக்கு குறைவான பாதிப்புடன் நோயாளிகளுக்கு மன மற்றும் உடல் ரீதியாக எளிதான முறையில் நடைபெறும் வாய்ப்பு அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தவளைகளின் குடலில் இருந்து கிடைத்த இந்த சிறிய பாக்டீரியா, எதிர்காலத்தில் புற்றுநோய் சிகிச்சை உலகையே மாற்றக்கூடிய ஒரு பெரிய நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஆராய்ச்சி என்ன சொல்கிறது?
ஜப்பானின் நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், அவர்கள் எவின்கெல்லா அமெரிக்கானா (Ewingella americana) என்ற ஒரு வகை பாக்டீரியாவை கண்டறிந்துள்ளனர். இந்த பாக்டீரியா இயல்பாகவே தவளைகள், பல்லிகள் போன்ற உயிரினங்களின் குடல்களில் வாழ்கிறது. முன்பு இது ஆபத்தில்லாத பாக்டீரியா என்றே கருதப்பட்டது.
ஆராய்ச்சி எப்படி நடந்தது?
விஞ்ஞானிகள் ஜப்பானிய மரத் தவளை, ஜப்பானிய புல் பல்லி, ஆகியவற்றின் குடல்களிலிருந்து மொத்தம் 45 வகையான பாக்டீரியா மாதிரிகளை எடுத்தனர். அவற்றை ஆய்வு செய்தபோது 9 பாக்டீரியா வகைகள் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் திறன் (anti-tumour effect) கொண்டதாக தெரியவந்தது. இதில் எவின்கெல்லா அமெரிக்கானா மற்ற எல்லாவற்றையும் விட, மிகச் சிறந்த புற்றுநோய் எதிர்ப்பு திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டது.
இந்த பாக்டீரியா எப்படி புற்றுநோயை எதிர்க்கிறது?
ஆய்வகச் சோதனைகளில் இந்த பாக்டீரியா, நேரடியாக புற்றுநோய் கட்டிக்குள் (tumour) நுழைகிறது, கட்டிக்குள் சென்று உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை (immune system) தூண்டுகிறது அதனால் உடலிலுள்ள T-cells (புற்றுநோய் எதிர்ப்பு செல்கள்)
புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கத் தொடங்குகின்றன.. இதன் விளைவாக கட்டியின் வளர்ச்சி நிற்கிறது.. மெதுவாக கட்டி சிறிதாகச் சுருங்குகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்..
கீமோதெரபி வேதனையிலிருந்து விடுதலையா?
இப்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் கீமோதெரபி, முடி உதிர்தல், கடுமையான சோர்வு, வாந்தி, உடல் வேதனை போன்ற பல பக்கவிளைவுகளை உண்டாக்குகிறது. ஆனால் இந்த புதிய “பாக்டீரியா சிகிச்சை” வெற்றி பெற்றால், பக்கவிளைவுகள் மிகக் குறைவாக இருக்கும்.. நோயாளிகளுக்கு வலி குறையும், செலவும் குறைவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..
மேலும் “ சிகிச்சை அளித்த 24 மணி நேரத்துக்குள் இந்த பாக்டீரியா ரத்தத்தில் காணப்படவில்லை.. 72 மணி நேரத்திற்குள் உடலில் ஏற்பட்ட அழற்சி இயல்பு நிலைக்கு திரும்பியது.. அதாவது, இதுவரை இந்த பாக்டீரியா பாதுகாப்பானது என்று தெரிகிறது. எதிர்காலத்தில் மார்பகப் புற்றுநோய் (Breast cancer), கணையப் புற்றுநோய் (Pancreatic cancer) போன்ற பிற புற்றுநோய்களிலும் இந்த பாக்டீரியாவை பயன்படுத்த ஆய்வு செய்யப்படும்.” என்று தெரிவித்துள்ளனர்.. இதனால் மனிதர்களுக்கு மென்மையான, பயனுள்ள, புதிய புற்றுநோய் சிகிச்சை உருவாகும் என்ற பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.



