இன்றைய காலகட்டத்தில் இதயம் தொடர்பான நோய்கள் பரவலாக இருந்து வருகிறது. இதய ஆரோக்கியம் என்பது உணவு மற்றும் உடற்பயிற்சியோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. நம் அன்றாட வாழ்வில் நாம் அறியாமல் செய்யும் சில பழக்கங்களும் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
சமீபத்தில், மருத்துவ நிபுணரும், இதயநோய் நிபுணருமான டாக்டர் அலோக் சோப்ரா, நமது இதயத்தைப் பாதுகாக்க உதவும் ஐந்து முக்கியமான ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் குறிப்பிடும் சில விஷயங்கள் நாம் ஆரோக்கியமானவை என்று நினைத்துக்கொண்டிருப்பவை. ஆனால் உண்மையில் அவை இதயத்திற்கு நல்லதல்ல.
மது அருந்துதல் : அதிகப்படியான மது அருந்துதல் இதயத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மது அருந்துவது சிறந்தது என்று டாக்டர் சோப்ரா அறிவுறுத்துகிறார். குறிப்பாக, கடினமான மதுபானங்களை தவிர்த்துவிட்டு, ரெட் ஒயின் மற்றும் ஒயிட் ஒயினைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
வேப்பிங் மற்றும் புகைப்பிடித்தல் : தற்போதைய தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமாகி வரும் வேப்பிங், புகைப்பிடித்தலை விட குறைவான தீங்கு விளைவிக்கும் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால், வேப்பிங் உண்மையில் புகைப்பிடித்தலை விட மோசமானது என்று அவர் எச்சரிக்கிறார். தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) ஆய்வுகள், வேப்பிங் மற்றும் புகைப்பிடித்தல் ஆகிய இரண்டும் நுரையீரல் மற்றும் இதயத்தின் செயல்பாட்டில் ஒரே மாதிரியான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதைக் கண்டறிந்துள்ளன.
நான்-ஸ்டிக் பாத்திரங்கள் : நாம் அன்றாடம் பயன்படுத்தும் நான்-ஸ்டிக் பாத்திரங்கள் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர் எச்சரிக்கிறார். இந்த பாத்திரங்களின் பூச்சு நீண்டகால பயன்பாட்டில் உடைந்து, உணவில் கலக்கக்கூடும். இது இதயத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும்.
அல்லுலோஸ் : சர்க்கரைக்கு மாற்றாக அல்லுலோஸ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதயநோய் நிபுணர்களின் பார்வையில், அல்லுலோஸ் சர்க்கரையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது சர்க்கரையை விட சிறந்ததாகக் கருதப்பட்டாலும், இதுவும் ஒருவகையில் சர்க்கரைதான். எனவே, அல்லுலோஸையும் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு : ஜிம்முக்கு செல்லும் பலர், ஒரு நாளைக்கு ஆறு முறை சாப்பிடுவது நல்லது என்று நம்புகிறார்கள். ஆனால், டாக்டர் சோப்ரா இந்த வழக்கத்தை மறுக்கிறார். ஒரு நாளைக்கு இரண்டு வேளைக்கு மேல் உணவு உட்கொள்வதைத் தவிர்க்குமாறு கூறியுள்ளார்.