எந்த ஒரு வழிபாட்டைத் தொடங்கினாலும், முதலில் குலதெய்வத்தை வணங்குவதுதான் நம் மரபில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. அனைத்து தெய்வங்களின் அருளும் நமக்குக் கிடைக்க வேண்டுமானால், குலதெய்வ வழிபாடு அவசியம். ஆனால், சிலருக்கு தங்கள் குலதெய்வம் யார் என்பதே தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கான சில எளிய வழிபாட்டு முறைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
குலதெய்வம் தெரியாதவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் :
வீட்டு வாசல் வழிபாடு : முதலில், வீட்டின் தலைவாசலில் மஞ்சள், குங்குமம் இட்டு, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து வழிபடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இந்த எளிய வழிபாட்டின் மூலம் குலதெய்வத்தின் அருளாசி கிடைக்கும் என்பது ஐதீகம்.
பிரம்ம முகூர்த்த வழிபாடு : வெள்ளிக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் (காலை 4:30 முதல் 6:00 மணிக்குள்) வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி வைக்கவும். விளக்கின் தண்டில் பூ, மஞ்சள், குங்குமம் இட்டு, வெற்றிலை, பாக்கு, பழம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம். அப்போது, “எங்கள் துன்பம் தீர, நாங்கள் வழிபடுவதற்கு எங்கள் குலதெய்வம் யார் என காட்டு” என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளலாம்.
நொச்சி மரக்கிளை பரிகாரம் : தெய்வாம்சம் கொண்ட நொச்சி மரக்கிளையைப் பயன்படுத்தி, வெள்ளிக்கிழமைகளில் 5 வாரங்கள் ஒரு எளிய பரிகாரத்தைச் செய்யலாம். நொச்சி மரத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி, அதனை குலதெய்வமாக கருதி வழிபடுங்கள். அதன் அடியில் ஒரு மண் பானை அல்லது பித்தளை செம்பில் நீர் நிரப்பி கலசம் போல வையுங்கள். அருகில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம், பூக்கள் சாற்றி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து மனமுருகி வேண்டிக்கொள்ளலாம்.
அத்தி மரக்கிளை பரிகாரம் : அதேபோல், அத்தி மரக் கிளையைக் கொண்டும் பரிகாரம் செய்யலாம். இந்த வழிபாட்டை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு மேல் வளர்பிறையில் தொடங்கலாம். அத்தி மரத்தின் கிளையில், ‘வயநமசி’ என்று எழுதி, மஞ்சள், குங்குமம் இட்டு, மஞ்சள் பட்டு துணியால் சுற்ற வேண்டும். இந்தக் கிளையை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து, கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து ருத்ராட்ச மாலையால் ‘வயநமசி’ என்று 1008 முறை 48 நாட்களுக்குத் தொடர்ந்து வழிபட்டால், குலதெய்வமே கனவில் தோன்றும் என நம்பப்படுகிறது.
குலதெய்வ கோயில் : குலதெய்வ கோவிலுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம். அருகில் இருந்தால் தினமும், தொலைவில் இருந்தால் மாதம் ஒரு முறையோ அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது சென்று வரலாம். ஆனால், ஆண்டுக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறந்தது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சென்று வழிபடுவதால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
இலுப்பை எண்ணெய் தீபம் : அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், ஒரு அகல் விளக்கில் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டு, இலுப்பை எண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை ஒன்றாகத் திரித்து, கிழக்கு நோக்கி வைத்து குலதெய்வத்தை நினைத்து வணங்குவது நல்ல பலன்களைத் தரும். இதை வெள்ளிக்கிழமை அன்று செய்தால், குலதெய்வத்தின் அருளை முழுமையாகப் பெறலாம்.
வீட்டில் குலதெய்வ புகைப்படம் : சாந்தமான குலதெய்வத்தின் புகைப்படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். ஆனால், உக்கிரமான தெய்வமாக இருந்தால், அதன் படத்தை வீட்டில் வைப்பதைத் தவிர்க்கலாம்.
Read More : மக்களே..! தொடர் விடுமுறையை முன்னிட்டு 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு…!