இன்றைய நவீன உலகில் ஏஐ தொழில்நுட்பம், குறிப்பாக ChatGPT, நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. எந்தவொரு சந்தேகம் அல்லது தகவல் தேவை என்றாலும், உடனடியாக சாட் ஜிபிடியைத்தான் நாடுகிறோம். சிலர், மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு கூட இதை பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த அபாயகரமான செயல் குறித்து மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நோயாளி, சளிப் பிடிப்பதால் அவரது ரத்தப் பரிசோதனையில் லிம்போசைட்ஸ் (Lymphocytes) 2% அதிகரித்திருந்தது. இது சாதாரணமானது என்று மருத்துவர் கூறியுள்ளார். ஆனால், அந்த நோயாளி சோதனை முடிவை ChatGPT-யிடம் கேட்டபோது, அது புற்றுநோய்க்கான அறிகுறி என்று பதிலளித்துள்ளது.
இதனால் இரவெல்லாம் தூக்கமில்லாமல் மறுநாள் மருத்துவரிடம் வந்துள்ளார். எனவே பல ஏஐ கருவிகள், சிறிய அறிகுறிகளுக்கும் கூட புற்றுநோய்தான் காரணம் என்று கூறி மக்களை பயமுறுத்தி வருகிறது. அதேபோல், மற்றொருவர் ‘உப்புக்கு மாற்றாக என்ன பயன்படுத்தலாம்?’ என்று ChatGPT-யிடம் கேட்டபோது, அது ‘புரோமைடு’ என்று பதிலளித்துள்ளது.
அந்த நபர் சாட் ஜிபிடி சொல்வதை நம்பி புரோமைடு கலந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டுள்ளார். இதனால், அவருக்கு புரோமைடு நச்சுத்தன்மை ஏற்பட்டு, உடல்நிலை மிகவும் மோசமடைந்து 3 வாரங்கள் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
சாட் ஜிபிடியால் மற்றொரு பயங்கர சம்பவமும் நிகழ்ந்துள்ளது. தனிமையில் இருந்த ஒரு வெளிநாட்டு நபர், தனது குடும்பத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சாட் ஜிபிடியில் பகிர்ந்துள்ளார். அதற்குப் பதிலளித்த AI கருவி, ‘உங்கள் குடும்பத்தார் உங்களைக் கொல்ல முயற்சிக்கிறார்கள்’ என்று கூறியுள்ளது. இதை நம்பிய அந்த நபர், தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கொடூரமான முறையில் கொலை செய்ததாக வெளிநாட்டுப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
மருத்துவரின் சொந்த அனுபவம்
இந்நிலையில் தான் டாக்டர் பிரகாஷ் மூர்த்தி, தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். பைக் தொடர்பான ஒரு வீடியோவுக்காக ‘சிங்கிள் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் உள்ள பைக்’ எது என்று அவர் சாட் ஜிபிடியிடம் கேட்டபோது, அது தவறான உதாரணத்தைக் கொடுத்தது. அதை நம்பி அவர் வீடியோ வெளியிட்டதால், அவருக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டது.
இந்த அனுபவத்திற்கு பிறகுதான், ‘பைக்கில் உள்ள ஒரு பாகத்தை கூட சரியாக அடையாளம் காணத் தெரியாத ஏஐ கருவியால், மனிதர்களின் சிக்கலான உடல்நலப் பிரச்சனைகளை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?’ என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் சாட் ஜிபிடியை டெலிட் செய்ததாகவும் கூறியுள்ளார்.
Read More : உங்கள் குழந்தைக்கு ஆதார் அட்டை எடுக்குறீங்களா..? அதிரடியாக வந்த மாற்றம்..!! பெற்றோர்களே இதை படிங்க..!!