இப்போதெல்லாம் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக அதிகாலையில் எழுந்தவுடன் நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்ய நினைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் காலையிலும் மாலையிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடைப்பயிற்சி செய்து வருகிறார்கள். ஆனால் நடைபயிற்சி முடிந்த உடனேயே குளிக்கலாமா? இல்லையா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதற்கான பதிலை நிபுணர்கள் தெளிவாக கூறியுள்ளனர்.
நடைபயிற்சி அல்லது ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளைச் செய்தால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், இதய துடிப்பு வேகமாகும், உடல் வெப்பமும் உயரும். தசைகள் செயல்படுவதால் உடலில் வியர்வை கூடும். இந்த நிலையில் உடல் முழுவதும் அதிக செயல்பாட்டு நிலையில் இருக்கும். இந்நேரத்தில் உடனே குளிப்பது உடலின் இயல்பான செயல்பாட்டை திடீரென மாற்றிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக உடல் வெப்பம் திடீரென குறைவதால் தலைச்சுற்றல், சோர்வு, தசை வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குளிர்ந்த நீரில் குளித்தால் ரத்த ஓட்டம் திடீரென மாறி பல உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்கும். எனவே உடற்பயிற்சி முடிந்தவுடன் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஓய்வு எடுத்த பிறகே குளிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இந்த இடைவெளியில் உடல் வெப்ப நிலை சாதாரணமாகும், இதய துடிப்பு அமைதியாகும், வியர்வை ஆறி தசைகளும் சீராகிவிடும். இந்த நேரத்தில் மெதுவாக நடந்துகொள்வது, சிறிது தண்ணீர் குடிப்பது, ஆழ்ந்த மூச்சு பயிற்சி செய்வது போன்றவை உடலை விரைவில் சீராக மாற்ற உதவும்.
குளிக்கும் போது குளிர்ந்த நீரைக் காட்டிலும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடலுக்கு ஏற்றதாகும். குளிர்ந்த நீர் உடலுக்கு தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். மொத்தத்தில், நடைபயிற்சி செய்த உடனேயே குளிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல; சரியான நேர இடைவெளி விட்டு குளிப்பதே பாதுகாப்பானதும் பயனளிப்பதும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Read more: திமுகவில் இணைந்த முன்னாள் எம்பி மைத்ரேயனுக்கு கட்சியில் முக்கிய பதவி..!! அதிர்ச்சியில் அதிமுக..!!



