இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முட்டைகள் குறித்துச் சமூக வலைதளங்களில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் தகவல்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) தற்போது அதிரடி விளக்கமளித்துள்ளது. முட்டைகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்றும், ஆதாரமற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வதந்தியின் பின்னணி என்ன..?
சமீபத்தில் கர்நாடகாவை சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் முட்டைகளில், புற்றுநோயை உண்டாக்கும் காரணியான ‘நைட்ரோபியூரான்’ (Nitrofuran) என்ற மருந்தின் துகள்கள் இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இது முட்டைப் பிரியர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக முட்டை மாதிரிகளைக் கைப்பற்றி ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தின.
FSSAI விளக்கம் :
இந்த விவகாரம் குறித்து FSSAI வெளியிட்டுள்ள அறிக்கையில், “நைட்ரோபியூரான் மருந்து கால்நடைகள் மற்றும் கோழிகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்குக் கடந்த 2011-ஆம் ஆண்டிலேயே இந்திய அரசு தடை விதித்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் முட்டைகளில் நடந்த ஆய்வை மட்டும் வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த முட்டை உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி மீதும் குற்றம் சுமத்துவது அறிவியல்பூர்வமானது அல்ல” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் நடைமுறையில் உள்ள தரக் கட்டுப்பாட்டு முறைகள் சர்வதேச தரத்திற்கு இணையாக இருப்பதாகவும், தற்போது விற்பனையில் உள்ள முட்டைகளில் புற்றுநோய் மருந்து இருப்பதாகப் பரவும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் அந்த ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
சமச்சீர் உணவுக்கு அவசியமான புரதச்சத்து முட்டையில் அதிகளவு உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், வதந்திகளால் மக்கள் தங்களின் ஊட்டச்சத்து உணவைத் தவிர்த்துவிடக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் பகிரப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை கண்டு அச்சப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



