தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. விஜய்யின் கால தாமதமான வருகையால் இந்த கூட்ட நெரிசல் நடந்ததாகவும், தவெகவினரின் பொறுப்பற்ற தன்மையும் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.. ஆனால், தாங்கள் முதலில் கேட்ட இடத்தை அரசு வழங்கவில்லை, ஆம்புலன்ஸ் ஏன் வந்தது, இரவில் ஏன் உடற்கூறாய்வு செய்யப்பட்டது என பல கேள்விகளை எழுப்பினர்..
இந்த நிலையில் தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில் ஒரு பதிவை போட்டிருந்தார்.. அவரின் பதிவில் “ ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சாலையில் நடந்து சென்றாலே தடியடி… சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது…. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.
அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்! என்று தெரிவித்துள்ளார். அவரின் பதிவுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் சில நிமிடங்களிலேயே அந்த பதிவை நீக்கிவிட்டார்..
எனினும் இதுபோன்று வன்முறையை தூண்டும் வகையில் பேசிய ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அவர் மீது புகாரளிக்கப்பட்டது..
இந்த நிலையில், தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டிவிட்டு புரட்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பதிவிட்டதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. அவரிடம் காவல்துறையினர் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.. ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது.