விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி – ஐஸ் ஹவுஸ் பகுதியில் அனுமதியின்றி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், நடிகரும் சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன், இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகரன் உள்ளிட்ட மொத்தம் 53 பேர் மீது இரு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வை தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ள நிலையில், காவல்துறை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி, கோவில்கள், பக்தர்கள் குழுக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பெருமளவில் சிலைகள் வைக்கப்பட்டன. வீடுகளில் சிறிய சிலைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டு, பின்னர் அவை நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதேபோல், பொது இடங்களில் வைக்கப்பட்ட பிரமாண்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலிலும், ஏரிகளிலும் கரைக்கப்பட்டன.
சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த நிலையில், திருவல்லிக்கேணியில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்த முயன்ற நடிகர் கனல் கண்ணன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.