தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது.
ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று தான் செயல்பட முடியும்.. தமிழகத்தின் 17-வது சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்று அடுத்த ஆட்சி அமையும் வரை இந்த காபந்து அரசாக செயல்படும்.
தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளின் சோதனையில் சிக்கிய பணம் பொருட்களின் மதிப்பு குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.. தமிழ்நாட்டில் 3 நாட்களில் பறக்கும் படையினரால் ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி ரூ.2.37 கோடி பணம், ரூ.18 லட்சம் மதுபானம், ரூ.2.88 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ரூ.14.42 கோடி விலை மதிப்புள்ள உலோகங்கள், ரூ.20.80 கோடி பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்டவிரோத பணப்புழக்கம், வாக்காளர்களை கவர வழங்கப்படும் இலவச பொருட்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தை கட்டுப்பட்ட கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளை தீவிரப்படுத்தி உள்ளன என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



