ஹரியானா மாநில நர்வானாவில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் பிரமோத் சர்மாவின் மனைவி சுமன் சர்மாவின் தங்கச் சங்கிலியை, ஸ்கூட்டரில் வந்த இருவர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நர்வானா மாடல் டவுன் பூங்கா அருகே மாலை 6 மணியளவில் நடந்துள்ளது. மாலை நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய சுமன், வீட்டிற்கு அருகிலுள்ள பாதையில் நுழைந்தபோது, திடீரென ஒருவர் பின்னால் பின்தொடர்ந்து கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்து ஓடியுள்ளார். பின்னர், கூட்டாளியுடன் ஸ்கூட்டரில் ஏறி வேகமாக தப்பிச் சென்றார்.
திருடப்பட்ட தங்கச் சங்கிலியின் மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தைத் தொடர்ந்து, உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அருகிலிருந்த சிசிடிவியில் தெளிவாக பதிவாகியுள்ளது.
தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், மாநில சட்ட-ஒழுங்கு நிலை குறித்த அரசியல் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. ஹரியானா ஆம் ஆத்மி கட்சி முதல்வர் நயாப் சைனியை விமர்சித்து, “பாஜக தலைவரின் மனைவிக்கே பாதுகாப்பு இல்லையெனில், சாதாரண மக்களுக்கு யார் பாதுகாப்பு தருவார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. குடியிருப்பினரும், பாதுகாப்பு ரோந்துகளை அதிகரிக்கவும், சிசிடிவி பராமரிப்பை உறுதிப்படுத்தவும், குற்றவாளிகளை உடனடியாக பிடிக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
காவல்துறை பதிவுகளின்படி, கடந்த இரண்டு மாதங்களில் இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட சங்கிலி பறிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 45க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தீர்த்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
Read more: “பாதி உலகத்தையே அழிச்சிடுவோம்..” அமெரிக்காவிலிருந்து மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் தளபதி..!!