இந்தியாவில் 2011-க்குப் பிறகு நடைபெறும் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, முழுமையாக டிஜிட்டல் வடிவத்தில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
முதல் கட்டமான வீட்டுப்பட்டியலிடல் நடவடிக்கை (House Listing Operation – HLO), 2026 அக்டோபர் 1ஆம் தேதி தொடங்குகிறது. இதில் வீட்டு வசதிகள், சொத்து உரிமை, வீட்டு வருமானம் உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் சேகரிக்கப்படும். இந்தக் கட்டத்தில் முக்கிய மாற்றம் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் தாங்களே தகவல்களை அளிக்கக்கூடிய Digital Self Enumeration முறைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியா இதுவரை கண்டிராத முன்னேற்றமான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையாகும்.
இரண்டாம் கட்டமான மக்கள்தொகை கணக்கெடுப்பு (Population Enumeration – PE), 2027 மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஒவ்வொரு நபரின் வயது, பாலினம், தொழில், கல்வி, மொழி, மதம் மற்றும் திருமண நிலை போன்ற தகவல்கள் சேகரிக்கப்படும். முக்கியமாக, இந்த முறையில் முதல்முறையாக சாதி கணக்கெடுப்பும் சேர்க்கப்படுகிறது. இது சமூக அமைப்பின் தன்மையை ஆழமாக புரிந்து கொள்ளவும், இலக்குவைத்த நலத்திட்டங்களை திட்டமிடவும் உதவும் என அரசு எதிர்பார்க்கிறது.
இந்த அறிவிப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி எல்லை நிர்ணயப் பயிற்சி போன்ற எதிர்பார்க்கப்படும் அரசியல் மாற்றங்களுக்கு வழிகாட்டும் புதிய நிலைப்பாட்டை உருவாக்குகிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த, புதிய மக்கள்தொகை தரவுகளுக்குப் பிறகு தொகுதிகள் மறுவரையறை செய்யப்படவேண்டும் என்பதே மத்திய அரசின் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2026-27 முக்கிய அம்சங்கள்:
* முதல் முறையாக முழு டிஜிட்டல் கணக்கெடுப்பு
* ஆன்லைன் மூலமாக தாங்களே விவரம் பதிவுசெய்யும் வசதி
* வீட்டு விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் இரு கட்டங்களாக
* சாதி கணக்கெடுப்பு அடக்கம்
* மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி எல்லை நிர்ணயத்திற்கு தரவுதாரமாக பயன்பாடு
Read more: உச்ச நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரை தமிழ் ஒலிக்க வேண்டும்..!! – முதலமைச்சர் ஸ்டாலின்