மத்திய பட்ஜெட்..!! தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஜாக்பாட் அறிவிப்புகள் என்னென்ன..? முழு விவரம் இங்கே..!!

Nirmala 2026 1

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட், தமிழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார அடையாளங்களுக்கு புதிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மிகப்பெரிய மெகா அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய அறிவிப்புகள் தமிழகத்திற்கு ஓரளவுக்குக் கைகொடுத்துள்ளன. குறிப்பாகப் போக்குவரத்து, கனிம வளம் மற்றும் தொல்லியல் துறைகளில் தமிழகம் இந்த முறை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.


தமிழகத்தின் நீண்டகால கனவான அதிவேக ரயில் (High-Speed Rail) திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 7 வழித்தடங்களில், சென்னை – பெங்களூரு மற்றும் சென்னை – ஹைதராபாத் ஆகிய இரு வழித்தடங்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பயண நேரத்தைக் கணிசமாக குறைப்பதோடு, தென்னிந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை மையங்களை மிக நெருக்கமாக இணைக்கும்.

அதேபோல், இந்தியாவின் தொன்மை வரலாற்றைப் பறைசாற்றும் ஆதிச்சநல்லூர் தளம், நாட்டின் 15 முக்கியத் தொல்லியல் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு அமையவுள்ள நவீன “கலாச்சார மையம்” சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும். இருப்பினும், கீழடி குறித்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

தொழில்துறையை பொறுத்தவரை, தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய “அரிய கனிம வழித்தடம்” (Rare Earth Corridor) ஒரு தொலைநோக்குத் திட்டமாகப் பார்க்கப்படுகிறது. மின்சார வாகனத் தயாரிப்பு மற்றும் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான கனிமங்களை சுத்திகரிக்கும் மையமாகத் தமிழகம் மாறப்போகிறது. மேலும், ஒடிசாவின் தால்சேர் முதல் தமிழகத்தின் ஆம்பூர் வரை அமையவுள்ள பிரத்யேக உள்நாட்டு நீர்வழிப் பாதை சரக்கு போக்குவரத்தைச் சுலபமாக்கும். வேளாண் துறையில், கடலோரப் பகுதிகளில் தென்னை சாகுபடியை மேம்படுத்தவும், அதிக மகசூல் தரும் கன்றுகளை நடவும் புதிய திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இது தென்னை விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஓரளவு பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி விதிப்பால் தத்தளித்துக் கொண்டிருக்கும் திருப்பூர் பின்னலாடை துறைக்கு, இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜவுளித் துறைக்கான ஒருங்கிணைந்த திட்டம்’ ஒரு உயிர்நாடியாக அமையவுள்ளது. உற்பத்திச் செலவை குறைக்கும் நவீன இயந்திரங்கள் மற்றும் உள்நாட்டு மூலப்பொருட்களுக்கான ஊக்கத்தொகை மூலம், உலகச் சந்தையில் இந்திய ஆடைகளின் விலையை மீண்டும் போட்டிக்குக் கொண்டு வர மத்திய அரசு முயன்றுள்ளது. ஆதிச்சநல்லூர், அதிவேக ரயில் என பல பாசிட்டிவ் அறிவிப்புகள் இருந்தாலும், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதி மற்றும் மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான கூடுதல் நிதி குறித்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : இனி சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு செல்ல 80 நிமிடங்கள் தான் ஆகும்..!! மத்திய பட்ஜெட்டில் வெளியான மெகா அறிவிப்பு..!!

CHELLA

Next Post

அரசியல் கடந்த நட்பு..!! அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் CM ஸ்டாலின்..!!

Sun Feb 1 , 2026
சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பக்கவாதம் (Stroke) காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும், சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் நல்ல […]
H Raja 2026

You May Like