சமூக ஊடகங்களில் ஒரு போலி முதலீட்டுத் திட்டம் குறித்த வீடியோ ஒன்று தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த விளம்பர வீடியோவில், ஒரு நாளைக்கு ரூ.60,000 வரையிலும், மாதத்திற்கு ரூ.10 லட்சம் வரையிலும் எளிதாகச் சம்பாதிக்க முடியும் என்று கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இந்தத் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊக்குவிப்பதாக அந்த வீடியோவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளதுதான்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவி, பலர் இதை உண்மை என்று நம்பத் தொடங்கிய நிலையில், மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான உண்மைச் சரிபார்ப்புக் குழுவான PIB (Press Information Bureau) Fact Check, இந்த விவகாரத்தில் தலையிட்டு உண்மையை உறுதிப்படுத்தியுள்ளது.
PIB-ன் உண்மைச் சரிபார்ப்புக் குழு, இந்த வீடியோ முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும், இது பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு போலி வீடியோ என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும், நிதி அமைச்சரின் உருவம் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டு, தவறான தகவல்களைப் பரப்புவதற்காக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்றும் PIB விளக்கம் அளித்துள்ளது.
PIB-யின் எச்சரிக்கை :
இது தொடர்பாக, எக்ஸ் தளத்தில் PIB வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வப் பதிவில், “மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரு எளிதான தினசரி வருமானத் திட்டத்தை ஊக்குவிப்பதாகக் காட்டும் வீடியோ முற்றிலும் தவறானது. நிதி அமைச்சரோ அல்லது மத்திய அரசோ அத்தகைய எந்தவொரு திட்டத்தையும் தொடங்கவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி..?
* வீடியோவில் பேசுபவரின் உதடு அசைவு சிதைந்து இருந்தாலோ அல்லது குரல் ஒத்திசைவு இயற்கைக்கு மாறாக இருந்தாலோ, அது AI மூலம் உருவாக்கப்பட்ட போலியாக இருக்கலாம்.
* வீடியோவில் உள்ள தேதி, பின்னணி அல்லது அரசு சார்ந்த லோகோக்கள் தவறாக அல்லது பொருந்தாமல் இருந்தாலோ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* அரசு சார்ந்த அதிகாரப்பூர்வ இணையதளங்களின் முகவரிகள் எப்போதும் gov.in என்றே முடிவடையும். வேறு ஏதேனும் நீட்டிப்புகளைக் கொண்ட சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை (Links) நம்ப வேண்டாம்.
* ஒரு செய்தியைப் பகிர்வதற்கு முன், அதைப்பற்றி நம்பகமான அரசு சார்ந்த அதிகாரப்பூர்வத் தகவலைத் தேடி அதன் உண்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தகவல்களைச் சரிபார்க்கும் முறை :
பொதுமக்கள் இனி எந்தச் செய்தி குறித்தும் சந்தேகம் ஏற்பட்டால், அதைத் தாமதமின்றி PIB-யின் உண்மைச் சரிபார்ப்புக் குழுவுக்கு அனுப்பிச் சரிபார்க்கலாம். அதற்கு, https://factcheck.pib.gov.in என்ற இணையதள முகவரி அல்லது +91 87997 11259 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவோ அல்லது pibfactcheck@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தகவல்களை அனுப்பி உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.



