தனது குழந்தைகளின் பள்ளி ஆசிரியையுடன் கள்ளத்தொடர்பு வைத்த தொழிலதிபர், கடத்தப்பட்டு பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மகாலட்சுமி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ராகேஷ் வைஷ்ணவ், ஒரு தொழிலதிபர். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் ஐஸ்கான் கோவில் அருகே தனியார் பள்ளியில் படிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 5 வயது மகனை பள்ளியில் சேர்ப்பதற்காக ராகேஷ் சென்றபோது, அங்கு பணியாற்றிய ஸ்ரீதேவி (25) என்ற ஆசிரியையுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், இருவரும் செல்போனில் தங்கள் நட்பை வளர்த்து வந்த நிலையில், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், ஸ்ரீதேவி தனது தந்தையின் மருத்துவச் செலவுக்காக ராகேஷிடம் ரூ.4 லட்சம் கேட்டுள்ளார். மேலும் பலமுறை சில காரணங்களை கூறி பணம் வாங்கியுள்ளார். ஆனால், ராகேஷ் கொடுத்த பணத்தை ஸ்ரீதேவி திருப்பித் தர மறுத்துள்ளார். இதனால், வேறு வழியின்றி அவர் பள்ளியின் பங்குதாரராக சேர்ந்ததாக கூறப்படுகிறது.
பின்னர், இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்த நிலையில், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் தான் கொடுத்த பணத்தை ராகேஷ் திருப்பிக் கேட்டபோது, ஸ்ரீதேவி அவரை மிரட்ட தொடங்கியுள்ளார். ராகேஷ் உல்லாசமாக இருந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவரது மனைவிக்கு அனுப்பிவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
செப்டம்பர் 18ஆம் தேதி ஸ்ரீதேவி, அவரது காதலன் சாகர் மற்றும் ரவுடி கணேஷ் ஆகியோர் இணைந்து ராகேஷை அவரது வீட்டில் இருந்து காரில் கடத்திச் சென்றுள்ளனர். அவரிடம் இருந்து ரூ.1,90,000 பறித்துவிட்டு, கோரைகுண்டே பாளையா பகுதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ராகேஷ், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் கள்ளக்காதலி ஸ்ரீதேவி, சாகர் மற்றும் கணேஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த மூவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.