தாயும், தந்தையும் இல்லாமல் வளரும் குழந்தைகள் அல்லது பெற்றோரின் ஆதரவை இழந்த சிறுவர்கள், வாழ்க்கையில் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். அவர்களின் கல்வி, பராமரிப்பு மற்றும் எதிர்கால நலனை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு “அன்பு கரங்கள்” எனும் நிதி உதவித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான குழந்தைகள் மாதம் ரூ.2,000 நிதி உதவியை பெற முடியும். 18 வயது வரை இந்த உதவி வழங்கப்படும். இத்துடன், பள்ளிப்படிப்புக்குப் பிறகும் அவர்களின் உயர்கல்வி மற்றும் தொழிற்திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான வழிகாட்டுதலும் வழங்கப்படும்.
தற்போது, சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த திட்டத்தில் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் போன்ற இடங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
“அன்பு கரங்கள்” திட்டத்தின் பயனாளர்களாகத் தங்களை பதிவு செய்ய விரும்பும் குழந்தைகள், சில தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். தாய் – தந்தை இல்லாத குழந்தைகள், அல்லது இருவராலும் கைவிடப்பட்டவர்கள், தகுதி பெறுவார்கள். மேலும், பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் மனநிலை சீர்கெட்டிருப்பதோ, உடல்நிலை மோசமாகவோ அல்லது சிறையில் இருப்பவராக இருந்தால், அத்தகைய குழந்தைகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க குழந்தையின் ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை நகல், கல்வி தொடர்பான சான்றிதழ்கள், வங்கி கணக்குப் புத்தகம் போன்றவை அவசியமாக சேர்க்கப்பட வேண்டும். இந்த ஆவணங்களுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – சென்னை தெற்கு, எண்:1, புது தெரு, பெருநகர சென்னை மாநகராட்சி வணிக வளாகம், முதல் தளம் (RTO அலுவலகம் எதிரில்), ஆலந்தூர், சென்னை – 600016 என்ற முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
Read More : PM SVANidhi | தெருவோர வியாபாரிகளுக்கு குட் நியூஸ்..!! கடன் தொகையை அதிரடியாக உயர்த்தியது மத்திய அரசு..!!