எஸ்.ஐ. ராஜராஜன் கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்..
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ சென்னை எழும்பூரில் கடந்த ஜூலை 18 அன்று தாக்குதலுக்கு ஆளாகிய ஆயுதப்படை எஸ்.ஐ. ராஜராஜன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம நபர்களால் எஸ்.ஐ. ராஜராஜன் அவர்கள் தாக்கப்பட்டதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், புனைவு FIR-களுக்கு பெயர்போன திமுக அரசு, அஜித்குமார் வழக்கு போலவே இந்த வழக்கிற்கு என்ன கதை எழுதியுள்ளது என தெரியவில்லை. ஆனால், ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்குதலுக்கு ஆளாகி, உயிரிழந்துள்ளது என்பது திமுக ஆட்சியின் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதை மீண்டும் மெய்ப்பிக்கிறது.
காவல்துறையினர் தாக்கப்படுவது, ராஜினாமா செய்வது, காவல்துறை சீர்கேடுகள் குறித்து போதுவெளியிலேயே தெரிவிப்பது என தொடர்ந்து வரும் செய்திகள் உணர்த்துவது ஒன்றைத் தான்- காவல்துறையை நிர்வகிக்க வக்கற்ற முதல்வராக இருக்கிறார் பொம்மை முதல்வர் ஸ்டாலின்! எஸ்.ஐ. ராஜராஜன் கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..