உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக திகழ்ந்த சீனா, தற்போது இந்தியாவின் மக்கள் தொகைக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் அதிக மக்கள் தொகை அதன் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு பலமாக இருக்க முடியும் என்றாலும், சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த சீனா, இப்போது அதன் பிறப்பு விகிதம் அபாயகரமாக குறைந்து வருவதால், மக்கள் தொகையை அதிகரிக்கும் முனைப்பில் விபரீத நடவடிக்கையை எடுத்துள்ளது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில், ‘ஒரு குழந்தை மட்டுமே’ என்ற கொள்கை உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளை சீனா விதித்தது. குறிப்பாக 1993-ல் ஒரு குழந்தை கொள்கை அறிமுகம் செய்யப்பட்டதுடன், மக்கள் தொகை அதிகரிப்பைத் தடுப்பதற்காக கருத்தடை சாதனங்கள் மற்றும் காண்டம் போன்ற பொருட்களுக்கான வரி பூஜ்ஜியமாக்கப்பட்டது. இதன் விளைவாக, சீனாவின் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து, மக்கள் தொகை வளர்ச்சி சரியத் தொடங்கியது.
இந்தச் சூழ்நிலையில், தனது நிலைப்பாட்டை மாற்றிய சீனா, மக்கள் தொகையை அதிகரிக்க முடிவு செய்தது. அதன்படி, 2015-ல் ‘இரண்டு குழந்தைகள் கொள்கை’யும், அதைத் தொடர்ந்து 2021-ல் ‘மூன்று குழந்தைகள் கொள்கை’யும் அமலுக்கு வந்தன. மேலும், மகப்பேறு விடுமுறை (பெய்ஜிங் போன்ற நகரங்களில் 128 நாட்களில் இருந்து 158 நாட்களாக) அதிகரிக்கப்பட்டதுடன், கர்ப்பிணியின் கணவருக்கும் 30 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது.
இருப்பினும், அதிகப்படியான செலவு மற்றும் குழந்தை வளர்ப்புச் சவால்கள் காரணமாக பல தம்பதிகள் குழந்தை பெற்றெடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதன் விளைவாக, 2019-ல் 14.7 மில்லியன் (1 கோடியே 47 லட்சம்) ஆக இருந்த பிறப்பு விகிதம், 2024-ல் 9.5 மில்லியன் (95 லட்சம்) ஆக சரிந்துள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவான விகிதமாகும்.
கருத்தடை சாதனங்களுக்கு 13% வரி உயர்வு :
இந்நிலையில், பிறப்பு விகித சரிவைக் கட்டுப்படுத்த, சீனா தற்போது ஒரு தீவிரமான முடிவை எடுத்துள்ளது. அதாவது, ஆணுறை உட்பட அனைத்துக் கருத்தடை மாத்திரைகள், மருந்துகள் மற்றும் சாதனங்கள் மீதான மதிப்பு கூட்டு வரியை அதிகரித்துள்ளது. இந்த பொருட்களின் மீது 13 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்த வரி உயர்வு காரணமாக, இதுவரை குறைந்த விலையில் கிடைத்து வந்த ஆணுறைகள் மற்றும் பிற கருத்தடை சாதனங்களின் விலை கணிசமாக அதிகரிக்கும். இதன் மூலம் அவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையும் என்றும், அது குழந்தை பிறப்பை அதிகரிக்கும் என்றும் சீன அரசு நம்புகிறது.
சீன அரசின் இந்த வரி உயர்வுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்கள் பலரும் இப்போதில் இருந்தே ஆணுறைகள் மற்றும் கருத்தடை சாதனங்களை அதிக அளவில் வாங்கிச் சேமித்து வைக்க தொடங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவது, சீனாவில் ஏற்பட்டுள்ள இந்தப் புதிய சிக்கலை உலகறிய செய்துள்ளது.
Read More : உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது எப்படி? இரவில் செய்யக்கூடாத விஷயங்கள்..!! சிம்பு கொடுத்த டிப்ஸ்..!!



