டெல்லியில் நடைபெற்று வரும் AI Impact Summit நிகழ்ச்சியில், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு ரோபோ நாயை “இந்திய தயாரிப்பு” எனக் காட்டியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் இன்று அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.
மேலும் அந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் “சமீபத்தில் நடைபெற்ற AI Summit நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்திற்கு, கேல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறோம். எங்கள் ஸ்டாலில் இருந்த பிரதிநிதி, அந்த தயாரிப்பின் தொழில்நுட்ப பின்னணியை அறியாதவர். கேமரா முன் தோன்றிய உற்சாகத்தில், ஊடகங்களிடம் பேச அனுமதி இல்லாதபோதிலும், தவறான தகவலை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் உணர்வை புரிந்து கொண்டு, நாங்கள் நிகழ்ச்சி இடத்தை காலி செய்துள்ளோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI Summit-ல் ஸ்டால் காலி செய்ய உத்தரவு
இதற்கு முன்பாக, AI Impact Summit நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, கேல்கோட்டியாஸ் பல்கலைக்கழகத்துக்கு தனது ஸ்டாலை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் எஸ் கிருஷ்ணன் “எந்தக் கண்காட்சியாளரும் தங்களுக்கு சொந்தம் இல்லாத பொருட்களை தங்களுடையதாகக் காட்டக் கூடாது. இப்படிப்பட்ட காட்சிகளை அரசு தொடர அனுமதிக்க விரும்பவில்லை,” என்று கூறினார்.
இந்த சர்ச்சை, செவ்வாய்க்கிழமை DD News-க்கு அளிக்கப்பட்ட ஒரு பேட்டியால் வெடித்தது. அதில், கேல்கோட்டியாஸ் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் (communications) துறை பேராசிரியர் Neha Singh, “Orion” என்ற பெயருடன் காட்சிப்படுத்தப்பட்ட ரோபோ நாய், பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
உண்மையில் அது சீன தயாரிப்பு Unitree Go2
இந்த வீடியோ வைரலானதும், சமூக வலைதளங்களில் பலர், அந்த ரோபோ நாய் உண்மையில் சீனாவைச் சேர்ந்த Unitree Robotics நிறுவனம் தயாரித்த Unitree Go2 மாடல் என்று சுட்டிக்காட்டினர். இந்த ரோபோ உலகம் முழுவதும் ஆராய்ச்சி மற்றும் கல்வி பயன்பாட்டில் பரவலாக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை பெரிதாகியதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகம் ஸ்டாலை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப செயலாளர் கிருஷ்ணன்,
“தவறாக வழிநடத்தும் காட்சிகளை அரசு பொறுத்துக்கொள்ளாது. மக்களை குழப்பும் வகையில் தங்களுடையதல்லாத ஒன்றை காட்சிப்படுத்தும் அமைப்புகளை நாங்கள் விரும்பவில்லை,” என்று கடுமையாக தெரிவித்தார்.
இதனிடையே தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த கேல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம், “ரோபோ நிரலாக்கம் என்பது, மாணவர்கள் AI நிரலாக்கத்தை கற்றுக்கொண்டு, உலகளாவிய கருவிகள் மற்றும் தளங்களைப் பயன்படுத்தி, உண்மையான உலகத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் எங்கள் முயற்சியின் ஒரு பகுதிதான்,” என்று தெரிவித்தது. மேலும், தங்களுக்கு எதிராக நடத்தப்படும் “பிரச்சார தாக்குதலால்” ஆசிரியர்களும் மாணவர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகவும் கூறியது.
நிகழ்ச்சி இடத்தில் காலியான ஸ்டால்
புதன்கிழமை, எக்ஸ்போவில் கேல்கோட்டியாஸ் பல்கலைக்கழகத்தின் ஸ்டாலில் எந்தக் காட்சியும் வைக்கப்படவில்லை. சில மாணவர்கள் மட்டும் அங்கு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேராசிரியர் நேஹா சிங்கின் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்த பேராசிரியர் நேஹா சிங்,
“விஷயங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்படாததால் இந்த சர்ச்சை ஏற்பட்டது. எங்களின் நோக்கம் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை,” என்று கூறினார்.
மேலும், “ரோபோ நாயை நாங்கள் தயாரித்தோம் என்று கூற முடியாது. மாணவர்கள் இதைவிட சிறந்த ஒன்றை உருவாக்க ஊக்கமளிப்பதற்காகவே அதை அறிமுகப்படுத்தினோம்,” என்றும் அவர் விளக்கினார்.
அரசு எக்ஸ்போ பகுதியை காலி செய்யச் சொன்னதாக வந்த தகவல்கள் குறித்து பேசிய அவர் “அதுபற்றி எனக்கு எந்தத் தகவலும் இல்லை. இன்று நாங்கள் அனைவரும் இங்கே இருக்கிறோம் என்பதைத்தான் நான் அறிவேன்,” என்றும் அவர் கூறினார்.
Read More : இந்த ரயில்வே செயலியை பயன்படுத்துறீங்களா? இந்த சேவைகள் அனைத்தும் மார்ச் 1 முதல் மூடப்படும்.!



