பல நூற்றாண்டுகளாக நாம் பயன்படுத்தும் காகிதத்தை உருவாக்க மரங்களை வெட்டுவதாலும், அதிக நீரைப் பயன்படுத்துவதாலும் சுற்றுச்சூழல் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக, ஒரு டன் காகிதம் தயாரிக்க சராசரியாக 24 மரங்கள் வரை வெட்டப்படுகின்றன. மேலும், தரத்தைப் பொறுத்து 10,000 லிட்டர் முதல் 60,000 லிட்டர் வரை தண்ணீர் செலவிடப்படுகிறது. இந்த காகிதங்களை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் கார்பன் வெளியேற்றமும் சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.
இந்தச் சூழல் பாதிப்புகளை குறைக்க, சீன விஞ்ஞானிகள் ஒரு புதிய முறையை கண்டறிந்துள்ளனர். சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், பாலைவனத்தில் காணப்படும் நுண்ணிய மணல் துகள்கள் மற்றும் விவசாயக் கழிவுகளைப் பயன்படுத்தி ஒரு புதிய வகை காகிதத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த ‘கல் காகிதம்’ (Stone Paper), சுமார் 80% கால்சியம் கார்பனேட் நிறைந்த பாலைவன மணல் துகள்கள் மற்றும் 20% HDPE பிசின் (Resin) மற்றும் பருத்தித் தண்டுகள் போன்ற விவசாயக் கழிவுகளைக் கொண்டு, வெப்பம் மற்றும் அழுத்தத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது.
மிக முக்கியமாக, இந்த புதிய தயாரிப்பு செயல்பாட்டில் தண்ணீர் சிறிதும் தேவைப்படுவதில்லை. மேலும், இரசாயனங்கள் மூலம் வெண்மையாக்கும் (Bleaching) அவசியமும் இல்லை.
இதனால், பாரம்பரிய காகிதத் தயாரிப்பை விட, இதன் மூலம் 60% வரை குறைவான கார்பன் மட்டுமே வெளியாகி சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பளிக்கிறது.
சிறப்பம்சங்களும் பயன்களும் :
* 1990களில் தைவானில் இதேபோன்ற தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டாலும், சீனா இதை முழு மூச்சாகச் சந்தைப்படுத்தி வருகிறது. கல் காகிதம் மிகவும் மென்மையானதுடன் மட்டுமல்லாமல், பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது:
* இது நீர் புகாத தன்மை மற்றும் நீர் உறிஞ்சுதல் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது. இதன் மீது தண்ணீர் ஊற்றினாலும் ஊறாது.
* இதை கிழிப்பது எளிதல்ல. மேலும், மை கசிவைத் தடுக்கும் பண்பும் இதில் உள்ளது.
* பாக்டீரியா எதிர்ப்புப் பண்பு இருப்பதால், மருத்துவப் பொருட்களைப் பேக்கிங் செய்யவும் இதைப் பயன்படுத்தலாம்.
* இது மறுசுழற்சி செய்யக்கூடியது. நோட்புக்குகள், பைகள் மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றில் அச்சிடுவதற்கு ஏற்றதாக இருக்கிறது.
காலநிலை மாற்றம் பெரிய ஆபத்தாக மாறி வரும் இந்தச் சூழலில், இந்தப் புதிய கண்டுபிடிப்பு, வன அழிப்பு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு எதிராகப் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும், பயன்படுத்தப்படாத பாலைவனக் கனிமங்களைப் பயன்படுத்திப் பயனுள்ள ஒரு தயாரிப்பை உருவாக்குவது ஒரு முன்மாதிரியாக உள்ளது.



