கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது.
ஆடுகளம், ஜிகர்தண்டா, டைரி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தயாரித்தவர் பைவ்ஸ்டார் கதிரேசன். இவர் ருத்ரன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். வில்லனாக சரத்குமார் மிரட்டி இருந்த இப்படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசை அமைந்திருந்தார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்து இருந்தார். ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த காஞ்சனா 3 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் ருத்ரன் படத்திற்கும் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
தமிழில் உருவான இப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து உலகமெங்கும் சுமார் 1500 திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்தனர். இப்படத்தின் பாடல்கள், ஆக்ஷன்காட்சிகள், டான்ஸ் ஆகியவை ரசிக்கும் படி இருந்தாலும் திரைக்கதை பழசுபோல் உள்ளதாக விமர்சனம் எழுந்தது. இப்படி ருத்ரன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் பேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் அமைந்திருந்ததால் இப்படத்திற்கு வரவேற்பும் கிடைத்து வருகிறது. அதன் எதிரொலியாக ருத்ரன் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.5 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.
குறிப்பாக ’ருத்ரன்’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.3.2 கோடி வசூலித்துள்ளது. அதேபோல் ஆந்திரா, தெலங்கானாவில் இப்படம் ரூ.1.75 கோடியை வாரிக்குவித்துள்ளது. கர்நாடகத்தில் ரூ.35 லட்சமும், கேரளாவில் ரூ.6 லட்சமும் முதல் நாளில் வசூலித்துள்ளது. இதுதவிர வெளிநாடுகளில் மொத்தமாக ரூ.40 லட்சம் வசூலித்துள்ள இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.5.76 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரிக்குவித்து உள்ளதாக கூறப்படுகிறது.