வருடத்துக்கு 250 திரைப்படங்களுக்கு மேல் ரிலீஸானாலும் சில படங்கள் மட்டுமே அடடா என்றும் ஆஹா என்றும் வியக்க வைக்கும். அப்படி ஆச்சரியங்களை அள்ளி வைத்த படங்களில் ஒன்று தான் ‘சுப்பிரமணியபுரம்’.
சசிகுமார் என்ற இயக்குநரை, நடிகரை, தயாரிப்பாளரை அறிமுகப்படுத்திய படம் அது. அந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் வெளியாகி இன்றோடு 15 வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த 2008ஆம் ஆண்டு இதே நாளில் வெளியாகி ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தப் படம். இதில், சசிகுமார், ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு, இசை அமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் என அனைவருமே ரசிகர்களை மொத்தமாக வசப்படுத்தினார்கள். கூடவே ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரும் எடிட்டர் ராஜா முகமதுவும்.
1980-களில் மதுரையில் லந்தாக திரியும் சில இளைஞர்களையும் உள்ளூர் அரசியல் புள்ளி, அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதையும் இடையில் நடக்கும் உறவையும் துரோகத்தையும் அழுத்தமாக சொன்ன படம் சுப்ரமணியபுரம். என்பதுகளை தத்ரூபமாக காட்டிய அந்தப் படத்தின் காட்சிகளும் ஜேம்ஸ் வசந்தனின், கண்களிரண்டால் பாடலும், ‘மரண பயத்தைக் காட்டிட்டான் பரமா’ என்பது போன்ற வசனங்களும் அந்த மதுரை பேச்சு வழக்கும் சுப்ரமணியபுரத்திற்கு இன்னும் உயிரூட்டின.
அதுதான் அந்தப் படத்தின் வெற்றிக்கும் காரணம். இந்தப் படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதை அடுத்து, ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் #15YearsOfSubramaniapuram என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில், இன்று தனது முதல் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை நிறைவுகூர்ந்த சசிகுமார், மக்களாகிய நீங்கள் அந்த படத்தை மாபெரும் வெற்றி திரைப்படமாக மாற்றிக் கொடுத்ததற்கு என்றும் நான் நன்றி கடன் பட்டவன் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த அருமையான நாளில் நான் மீண்டும் ஒரு இயக்குநராக களம் இறங்க உள்ளேன். அடுத்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறி, அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் இயக்குனர் சசிகுமார்.