நடிகர் சூர்யாவின் ’சூரரைப் போற்று’ திரைப்படம் 8 ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்று மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை பெருக்கியவர். இவரது திரைப்பயணத்தில் முக்கிய திரைப்படமாக அமைந்தது ‘சூரரைப் போற்று’. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான இப்படம் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியது. கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும், முக்கிய கதாபாத்திரங்களில் ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பல்வேறு விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கடந்த 2021ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளை ‘சூரரைப் போற்று’ வென்றது. மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை ஆகிய 5 பிரிவுகளுக்கான தேசிய விருதையும் வென்று அசத்தியது. இந்நிலையில், 67-வது தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழாவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 8 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
1. சிறந்த நடிகர் – சூர்யா (சூரரைப் போற்று)
2. சிறந்த நடிகை (Critics) – அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)
3. சிறந்த துணை நடிகை – ஊர்வசி (சூரரைப் போற்று),
4. சிறந்த இயக்குநர் – சுதா கொங்கரா (சூரரைப் போற்று)
5. சிறந்த இசையமைப்பாளர் – ஜிவி பிரகாஷ் (சூரரைப் போற்று)
6. சிறந்த பாடகர் – கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ் (ஆகாசம் – சூரரைப் போற்று)
7. சிறந்த பாடகி – தீ (காட்டுப் பயலே -சூரரைப் போற்று)
8. சிறந்த ஒளிப்பதிவாளர் – நிகேத் பொம்மிரெட்டி (சூரரைப் போற்று)
அதேபோல், தெலுங்கு திரையுலகில் ’புஷ்பா’ திரைப்படம் 7 விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த பாடகர் (ஸ்ரீவள்ளி), சிறந்த பாடகி (ஊ அண்டவா), சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இசையமைப்பாளர் என 7 பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது. மேலும் அல்லு அர்ஜூனின் ‘ஆலா வைகுந்தபுரம்லோ’ திரைப்படம் 3 விருதுகளை பெற்றுள்ளது.
மலையாளத்தில் ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படம் 4 விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த பாடலாசிரியர், சிறந்த துணை நடிகை ஆகியப் பிரிவுகளில் இந்தப் படம் விருது பெற்றுள்ளது. மேலும், வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மற்றும் அல்லு அர்ஜூனின் தந்தையும், தெலுங்கு தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த்துக்கு வழங்கப்பட்டுள்ளது.