இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில், மோகன் லால், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன், ரவீணா ரவி என பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். கடந்த டிசம்பர் 12ஆம் தேதியன்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் படத்தின் அவரது கதாபாத்திரமான முத்துவேல் பாண்டியனின் புரோமோவை அதிரடி பின்னணி இசையுடன் படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தை தரமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் நெல்சன் ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார் என்றும், தினமும் 4 மணிநேரம்தாம் தூங்கவே செய்கிறார் என்றெல்லாம் கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ரஜினி, நெல்சனிடம் “ஆரோக்கியத்தை பாத்துக்கங்க. ரொம்ப சிரமப்பட வேண்டாம். கரெக்ட்டா பண்ணுங்க. ஓடுற படம் கண்டிப்பா ஓடும். தைரியமா இருங்க” என அறிவுரை கூறியிருக்கிறாராம். ஏனெனில் கடைசியாக வந்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்ததாலும், ரஜினிகாந்த், சிவராஜ் குமார், மோகன் லால் என உச்ச நட்சத்திரங்கள் இருப்பதாலும் நெல்சன் ஜெயிலர் படத்தின் மீது அதீத கவனத்துடன் இருக்கிறார் என பார்த்து பார்த்து உருவாக்கி வருகிறார் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.