நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கம் ஹேகட செய்யப்பட்டது குறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
திரைப்பிரபலங்கள் பொதுவாக தாங்கள் சார்ந்த படங்களின் அப்டேட், தங்களது புதிய படங்களின் அறிவிப்பு மற்றும் தங்களின் பர்சனல் கொண்டாட்டங்கள் தொடர்பான தகவல்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர். ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் இடையே ஒரு தொடர்பு ஏற்படுத்தும் ஒரு இணைப்புப் பாலம் போல செயல்படுபவை பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைதளங்கள்.. ஆகையால் பிரபலங்கள் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பர். அந்த வகையில் நடிகர் கார்த்தி தன்னுடைய ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி ஃபேஸ்புக் பக்கத்திலும் அவ்வப்போது படம் குறித்த தகவல்களை பகிர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தனது புதிய படமான ஜப்பான் பூஜை தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து, கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கத்தில் கேம் தொடர்புடைய வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு, லைவ் செய்யப்பட்டு வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் கார்த்தியிடம் ஏன் கேமை லைவ் செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் கார்த்தி இது குறித்த தனது விளக்கத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ என்னுடைய ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் குழுவோடு பேசி பிரச்னையை சரி செய்யும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.