தமிழ் சினிமாவில் விஜய் அஜித் காலக்கட்டத்திற்கு முன்பு முற்றிலும் வேறுப்பட்டதாக சினிமா இருந்தது. அப்போதெல்லாம் நடிகைகள் அதிகமாக மேக்கப் செய்துகொள்வதெல்லாம் கிடையாது. குறைவான மேக்கப்பில் ஒரு புடவையை மட்டும் கட்டிக்கொண்டு கூட திரைப்படங்களில் நடித்துவிடுவார்கள். அந்தவகையில், அப்போதைய காலக்கட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை நளினி. டி.ராஜேந்தர் இயக்கிய உயிருள்ளவரை உஷா திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
அதன் பின்னர், நளினிக்கு அதிகமாக வாய்ப்புகள் வர துவங்கின. தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க துவங்கினார். ஆனால், சினிமாவில் நடிகையாக இருந்தப்போதே நடிப்பின் மீது பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளார் நளினி. திருமணம் செய்துக்கொண்டு குடும்பமாக வாழ வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது. இந்நிலையில், அப்போது உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த ராமராஜனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்ததால் சினிமாவில் நடிப்பதை கைவிட்டார். அதன் பிறகு சில படங்களில் நாடகங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
அவரது உடல் எடை அதிகரித்தது குறித்து ஒரு பேட்டியில் கூறும்போது, ”திருமணத்திற்கு பிறகு எனது உடல் எடை அதிகரிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். எனவே, அதற்காக ஊசி போட்டு உடல் எடையை அதிகரித்தேன். ஏனெனில் நான் உணவில் கட்டுப்பாட்டோடு இருக்கும்போது என் மகன் ஒரு விஷயத்தை கூறினான். நடிகையாக இருந்தப்போது ஒல்லியாக இருப்பதற்காக கட்டுப்பாட்டோடு இருந்தீர்கள். இப்போது அம்மாவாக இருக்கும்போதும் ஏன் கட்டுப்பாடோடு இருக்கிறீர்கள். என கேட்டான். அதன் பிறகு நான் எனது உடல் எடையை அதிகரித்துவிட்டேன்” என கூறியுள்ளார் நளினி.