நடிகை சமந்தா மயோசிடிஸ் இந்தியா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் சமீபத்தில் மயோசிடிஸ் என்னும் அரியவகை தசை நோயால் பாதிக்கப்பட்டார். மயோசிடிஸ் என்பது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை தசை செல்களுக்கு எதிராக செயல்பட்டு அதை சிதைக்கும் நோயாகும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, ஒருகட்டத்தில் படங்களில் நடிப்பதை விட்டு தொடர் சிகிச்சை மேற்கொண்டார். இதனால் சில படங்களுக்கு ஒப்பந்தம் அளித்திருந்த முன்பதிவு தொகையையும் திருப்பிக் கொடுத்துவிட்டு நடிப்பிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, சமந்தா தனது தாயுடன் அமெரிக்காவுக்கு சென்று, அங்கு மயோசிடிஸ் நோய்க்கான சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மயோசிடிஸ் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் மயோசிடிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பர தூதராக சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் நாடு முழுவதும் இந்நோய் குறித்து பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி நோயின் தீவிர தன்மையை குறைக்க முடியும் என மயோசிடிஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.