கேரளாவை சேர்ந்தவரான அபிராமி, கல்லூரியில் படிக்கும்போது மலையாள சேனலில் தொகுப்பாளராக பணியாற்றியவர். அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமானதை அடுத்து அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில், கடந்த 1999இல் வெளியான பத்ரம் என்கிற மலையாள படம் மூலம் அறிமுகமானார் அபிராமி. இதற்கு அடுத்த ஆண்டு தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த வானவில் படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் அபிராமி.
பின்னர், மிடில்கிளாஸ் மாதவன், சமுத்திரம் தோஸ்த், சார்லி சாப்ளின் போன்ற தமிழ் படங்களில் நடித்து வந்த அபிராமிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது விருமாண்டி தான். இப்படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்திருந்த அபிராமி, மதுரைப் பெண்ணாகவே வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும், அந்த அளவுக்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதற்கிடையே, கடந்த 2004ஆம் ஆண்டு தன் பெற்றொருடன் அமெரிக்காவுக்கு குடியேறினார். அங்கு அவருக்கு வேலை கிடைத்ததால், சினிமாவுக்கு டாடா காட்டிவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். கடந்த 2009இல் அபிராமிக்கு திருமணம் நடைபெற்றது. இவர் பிரபல மலையாள எழுத்தாளரான பாவனனின் பேரன் ராகுலை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் அமெரிக்காவில் வசித்து வந்த அபிராமியை மீண்டும் கம்பேக் கொடுக்க வைத்தது கமல்ஹாசன் தான். அவர் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் நடிகை பூஜா குமாருக்கு டப்பிங் பேசியது அபிராமி தான். அதன்பின்னர் ஜோதிகாவின் 36 வயதினிலே படம் மூலம் சினிமாவில் தன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அபிராமி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில், அன்னையர் தினத்தன்று நடிகை அபிராமி குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார். அதன்படி தானும், தனது கணவர் ராகுலும் கடந்தாண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளதாகவும், அந்த பெண்ணுக்கு கல்கி என பெயரிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தன் வாழ்வை மாற்றிய தருணம் என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ள அபிராமி, புது அம்மாவாக அன்னையர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைந்ததாக பதிவிட்டுள்ளார். பெண் குழந்தையை தத்தெடுத்துள்ள அபிராமிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.