நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு ஹெச்.வினோத் மற்றும் அஜித் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்திற்கு ’துணிவு’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் இப்படத்தின் படப்பிடிப்புக்காக பாங்காக் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ‘துணிவு’ படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் படப்பிடிப்புகளே இன்னும் முடியாததால், இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக நடிகரும், திரைப்பட விநியோகஸ்தருமான ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார்.

இதற்கிடையே, வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், துணிவு திரைப்படத்தின் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் வீரம் படமும், விஜய்யின் ஜில்லா படமும் வெளியான நிலையில், கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஜித்-விஜய் படங்கள் திரையரங்குகளில் ஒன்றாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு கோயமுத்தூர் மாப்பிள்ளை மற்றும் வான்மதி 1996 ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், பூவே உனக்காக மற்றும் கல்லூரி வாசல் 1996 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பிப்ரவரி மாதமும், காதலுக்கு மரியாதை மற்றும் ரெட்டை ஜடை வயசு 1997ஆம் ஆண்டும், துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் உன்னைத் தேடி 1999ஆம் ஆண்டும், குஷி மற்றும் உன்னைக் கொடு என்னைத் தருவேன் 2000 ஆம் ஆண்டும், பிரண்ட்ஸ் மற்றும் தீனா 2001ஆம் ஆண்டும், பகவதி மற்றும் வில்லன் 2002 ஆம் ஆண்டும், திருமலை மற்றும் ஆஞ்சநேயா 2003ஆம் ஆண்டும், ஆதி மற்றும் பரமசிவன் 2006ஆம் ஆண்டும், இருதியாக 10-வது முறை ஜில்லா மற்றும் வீரம் 2014 ஆம் ஆண்டு ஒருநாளில் வெளியாகி இவ்விருவரின் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த வரிசையில் 11-வது முறையாக விஜயின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் மோதவுள்ளது.