”நடிகர்கள் அஜித்-விஜய் ஆகியோரை ஒரே படத்தில் நடிக்க வைத்து திரைப்படம் இயக்க ஆசைப்படுகிறேன்… அதற்கு இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்று திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி.நகரில் தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட குறும்பட போட்டிக்கான, விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறந்த குறும்படங்களுக்கு இயக்குநர்கள் வசந்த் சாய், வெங்கட் பிரபு ஆகியோர் விருது மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, ”முன்னணி நடிகர்கள் அஜித் – விஜயை வைத்து திரைப்படம் இயக்க எனக்கு ஆசை உள்ளது. அஜித் – விஜய் இருவரும் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கான சந்தர்ப்ப சூழல் வரும்போது படம் இயக்குவேன்” என்றார்.
மேலும், ‘மாநாடு படத்தில் நடிகர் சிம்புவை புதிய தோற்றத்தில் நடிக்க வைத்தேன். அதேபோல் வெந்து தணிந்தது காடு படத்திலும் நடிகர் சிம்பு, தன் வழக்கமான மேனரிசம் இல்லாமல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்’ என்றார். ‘திரைத்துறையில் இயக்குநராக சாதிக்க விரும்பும் இளைஞர்கள் நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டும்’ என்று இயக்குநர் வசந்த் சாய் அறிவுறுத்தினார்.
அஜித்தும், விஜய்யும் ராஜாவின் பார்வையிலே என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.