நடிகர் அஜித்தின் ‘ஏகே 61’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘வலிமை’ படத்தைத் தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘ஏகே 61’. இந்தத் திரைப்படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அஜய், சிபி சந்திரன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ஜெய்சங்கர் இரட்டை வேடத்தில் நடித்து, கடந்த 1976ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான ‘துணிவே துணை’ படத்தின் டைட்டிலைத்தான் ‘ஏ.கே.61’ படத்திற்கு வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற அக்டோபர் 2ஆம் தேதியான காந்தி ஜெயந்தி அன்று வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.