அமைதியான அதே நேரத்தில் அழுத்தமான கேரக்டர்களில் தன்னை உள்வாங்கிக் கொண்டு நடிக்கும் சில நடிகைகளில் ஒருவர்தான் ஜோதி. ஆந்தர மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர், பள்ளிக் காலத்திலிருந்து நடனம் நாட்டியம் ஆகியவற்றில் ஈடுபாடு இருந்தது. சிறுவயதிலேயே ரேடியோவில் உள்ள பாடலை கேட்டு நடனமாடியது திரைப்படங்களை பார்த்து அதே போல் நடித்துக் காண்பிப்பது ஆகியவற்றில் ஆர்வமாக இருந்து வந்தார். ஜோதியின் நடிப்பு ஆர்வத்தை புரிந்து கொண்ட பெற்றோர்கள் அவருக்கு சினிமாவில் நடிக்க அனுமதி வழங்கினர்.
அந்தவகையில், தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படம் தெலுங்கில் துர்ப்பு வெள்ளை ரயிலு என்ற பெயரில் ரீமேக் ஆனது. அந்த படத்தில் அறிமுகமானவர்தான் தமிழில் பிற்காலத்தில் மிகப்பெரிய ஹீரோவான மோகன் என்பவர். அதேபோல் அந்த படத்தின் நாயகியாக ஜோதி அறிமுகமானார். இருவருக்குமே இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது.
தெலுங்கில் முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால் அடுத்த படமே அவருக்கு ’வம்ச விருட்சம்’ என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவருக்கு சிறந்த நடிகை என்ற பிலிம் விருதும் கிடைத்தது. இந்நிலையில் தான் டி ராஜேந்தர் ’ஒரு தலை ராகம்’ படத்திற்கு பின்னர் ’ரயில் பயணங்களில் ’என்ற படத்தை எடுக்க முடிவு செய்தார். அந்த படத்தின் நாயகியாக ஜோதியை நடிக்க வைத்தார். இப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார்.
குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த புதுக்கவிதை என்ற படத்தின் நாயகியாக ஜோதி நடித்தார். தொடர்ந்து கிடைத்த வெற்றி காரணமாக விஜயகாந்த்துடன் சட்டம் சிரிக்குது, சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள், மீண்டும் விஜயகாந்துடன் ராமன் ஸ்ரீ ராமன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனை அடுத்து அவருக்கு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. கடந்த 1985 – 1992 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் தெலுங்கில் பல படங்களில் நடித்தார்.
இந்நிலையில், நடிகை ஜோதியை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்த பெருமை இயக்குனர் சரணுக்கு சேரும். பார்த்தேன் ரசித்தேன் என்ற படத்தில் நாயகன் பிரசாந்த் அம்மாவாக ஜோதி நடித்திருந்தார். இதன் பிறகு அவர் மீண்டும் தமிழில் ஒரு சுற்று வந்தார். வண்ணத் தமிழ் பாட்டு, உள்ளம் கொள்ளை போகுதே, கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, அஜித் நடித்த ராஜா உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.
இந்நிலையில் தான் கடந்த 2007ஆம் ஆண்டு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 44-வது வயதில் 2007ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி காலமானார். அப்போது இளம் வயதில் ஒரு சிறந்த நடிகை மறைந்தது திரையுலகிற்கு ஒரு மிகப்பெரிய இழப்பாக கருதப்பட்டது.