ஷீலா ராஜ்குமார் நடிப்பில் தமிழ் சினிமாவுக்கு புதிதாக அறிமுகமாகியுள்ளது ‘பட்டாம்பூச்சியின் கல்லறை’
டூ லெட், மண்டேலா திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் ஷீலா ராஜ்குமார். இவர் நடிப்பில் அறிமுக இயக்குநர் பாக்யா எழுதி, இயக்கியுள்ள ‘பட்டாம்பூச்சியின் கல்லறை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரூபி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில், குழந்தைகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு குழந்தைகளுக்கான திரைப்படமாக அமையும் என கருதப்படுகிறது.
இளையராஜாவின் மகளும் பாடகியுமான ராஜா பவதாரணி இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அஜித் ஆச்சர்யா ஒளிப்பதிவில், ஸ்ரீதரின் நடன இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மனதை மயக்கும் பாடல்களுக்கு சொந்தக்காரரான விவேகா, இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியுள்ளார். ‘பட்டாம்பூச்சியின் கல்லறை’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் வெங்கட் பிரபு மற்றும் மிஸ்கின் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
படத்தின் டீசரை திரையரங்கில் காணலாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘பட்டாம்பூச்சியின் கல்லறை’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.