விஜய் டிவியில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த அசீம், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே வந்தன. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் நடந்துகொண்டவிதமும் பயன்படுத்திய வார்த்தைகளும் விமர்சனத்துக்குள்ளாகின. இருப்பினும் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார் அசீம். இதனையடுத்து அவர், பிரபல இயக்குநரின் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. அதன் பிறகு இந்தப் படம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்தப் படம் தொடர்பாக தகவல் ஒன்று பரவி வருகிறது. அதன்படி சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த பொன்ராம் இயக்கத்தில் அசீம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் இணைந்து இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.